புதுடெல்லி: நூற்றுக்கணக்கான விதவை முஸ்லிம் பெண்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய பிறகுதான் வக்பு விவகாரம் விவாதிக்கப்பட்டது. இறுதியில் சட்ட திருத்தமும் செய்யப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் ஹிசாரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: “வக்பு சொத்துக்கள் பல தசாப்தங்களாக தவறாகப் பயன்படுத்தப்பட்டு, ஏழை முஸ்லிம்களுக்குப் பதிலாக நில மாஃபியாக்களுக்கு பயனளித்தன.
நூற்றுக்கணக்கான விதவை முஸ்லிம் பெண்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய பிறகுதான் வக்பு விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் சட்ட திருத்தமும் செய்யப்பட்டது. இப்போது, ஏழைகள் மீதான சுரண்டல் ஒருவழியாக நிறுத்தப்பட இருக்கிறது. அந்தப் பணம் ஆரம்பத்திலிருந்தே நேர்மையாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், என் இளம் முஸ்லிம் இளைஞர்கள் சைக்கிள்களுக்கு பஞ்சர் போடுவதில் தங்கள் வாழ்க்கையை செலவிட வேண்டியிருக்காது.
புதிய வக்ஃப் சட்டத்தின்படி, எந்தவொரு ஆதிவாசி மக்களுக்கும் சொந்தமான நிலம் அல்லது சொத்தை வக்பு வாரியம் கையகப்படுத்த முடியாது. ஏழை மற்றும் பழங்குடியின முஸ்லிம்கள் இதன் மூலம் பயனடைவார்கள். மனதில் முஸ்லிம்கள் மீது சிறிதளவு அனுதாபம் இருந்தாலும், காங்கிரஸ் கட்சி ஏன் ஒரு முஸ்லிமை கட்சித் தலைவராக ஆக்கவில்லை? அவர்கள் ஏன் அதைச் செய்வதில்லை?
பாஜக அரசு முத்தலாக் என்ற தீய நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வந்தது. கோடிக்கணக்கான முஸ்லிம் சகோதரிகளின் நலனுக்காகவும், அவர்களின் குடும்பங்களைப் பாதுகாக்கவும் நாங்கள் ஒரு வலுவான சட்டத்தை இயற்றினோம்” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.