சாகிர்,
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 4-வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள சாகிர் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 308.238 கிலோமீட்டராகும். இதில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தனர்.
முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட மெக்லரன் அணி வீரரான ஆஸ்கர் பியாஸ்ட்ரி (ஆஸ்திரேலியா) 1 மணி 35 நிமிடம் 39.435 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் அவர் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். அவரை விட 15.499 வினாடிகள் பின்தங்கிய இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் ரஸ்செல் (மெர்சிடஸ் அணி) 2-வது இடம் பிடித்தார். இங்கிலாந்து வீரர் லான்டோ நோரிஸ் (மெக்லரன் அணி) 3-வது இடத்தை பெற்றார். நடப்பு சாம்பியனான நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இதுவரை நடந்துள்ள 4 சுற்றுகள் முடிவில் லான்டோ நோரிஸ் 77 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பியாஸ்ட்ரி 74 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இதன் 5-வது சுற்று போட்டி சவுதி அரேபியாவில் வருகிற 20-ந் தேதி நடக்கிறது.