சென்னை: தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம் திமுக கூட்டணி மற்றும் தவெக தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், திமுக தனது கூட்டணியை அப்படியே தக்க வைத்து, தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. அவ்வப்போது நடைபெற்ற சில சம்பவங்கள், விசிக திமுக கூட்டணியில் இருந்து விலகிவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், திமுக கூட்டணியில் தான் இருப்போம் என்பதை திருமாவளவன் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார்.
ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றே தொடர்ந்து தெரிவித்து வந்தார். ஆனால், கடந்த மார்ச் 25-ம் தேதி காட்சிகள் மாறின. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திடீரென மார்ச் 25ம் தேதி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். தமிழக நலனுக்காக சந்தித்ததாக அவர் கூறினாலும், கூட்டணி பேச்சுதான் என்பதை பாஜக தரப்பு உறுதிப்படுத்தியது.
முன்னதாக, சட்டப்பேரவையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜகவை மனதில் வைத்து ‘தப்பு கணக்கு போட வேண்டாம்’
என்று அதிமுகவை கேட்டுக் கொண்டார். அதற்கு அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல் சரியான கணக்கைத் தான் பழனிசாமி போடுவார் என்று எதிர்வினையாற்றினார்.
அதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதிமுக, பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைத்திருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வந்தார். அத்துடன் சட்டப்பேரவையில்,” தங்கமணி கூட்டணி கணக்கில் ஏமாறமாட்டோம் என்று தெரிவித்திருந்தார். நீங்கள் ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.இதுதவிர, வக்பு சட்டத்திருத்தம், கச்சத்தீவு மீட்பு தொடர்பாக தமிழக அரசின் தீர்மானங்களை அதிமுக ஆதரித்தது. இதனால் அதிமுக, பாஜக பக்கம் செல்ல வாய்ப்பில்லை என்பது போல் தோன்றியது.
ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை, அதிமுக குறித்த திமுகவின் கணிப்பை மாற்றிவிட்டது. நேற்று முன்தினம் சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா, ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ஆலோசனை நடத்தி, அங்கிருந்தபடியே அதிமுக தரப்பினரிடம் பேசி, மாலையில் கிண்டியில் உள்ள ஓட்டலில், அருகில் பழனிசாமி உள்ளிட்டோரை வைத்துக் கொண்டே, அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று அறிவித்தார்.
அந்த நிகழ்வில், பழனிசாமி எதுவும் பேசாவிட்டாலும், அவரது வீட்டில் நடைபெற்ற விருந்தில் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்று 45 நிமிடங்களுக்கும் மேலாக பேசியது இந்த கூட்டணிதான் தேர்தலை சந்திக்கப் போகிறது என்பதை உறுதிப்படுத்தியது.
அத்துடன், ஓபிஎஸ், தினகரன் குறித்த கேள்விக்கு, அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று கூறி, அதிமுக தலைமை சிக்கியுள்ள நெருக்கடிக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அதிமுகவை பொறுத்தவரை, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே பாஜகவுடனான கூட்டணி குறித்து பேசப்பட்டு வந்தது. ஆனால் கூட்டணி அமைக்க பழனிசாமி சம்மதிக்கவில்லை. தனித்தனியாக பாஜகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்ததால், திமுக எளிதாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றியது.
ஆனால், தேர்தல் முடிவை ஒப்பு நோக்கும் போது, இரு கூட்டணியும் இணைந்திருந்தால் குறைந்த பட்சம் 15 இடங்கள் அதிமுக, பாஜக தரப்புக்கு கிடைத்திருக்கும் என்பது தெரிந்தது.
வாக்கு சதவீதம் அதிகரிப்பு: நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் இடையில் பெரிய அளவில் தமிழகத்தில் வாக்கு சதவீதம் வித்தியாசப்பட வாய்ப்பு இல்லை என்பதும், பாஜகவுக்கு தற்போது வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதையும் கருத்தில் கொண்டே, இருதரப்பும் பேசி கூட்டணியை உறுதி செய்ததாக தெரிகிறது.
இந்த கூட்டணி அறிவிப்பால், அதிமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை நீக்கப்பட்டது, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக தேர்வானது ஆகியவையும் அதிமுகவினருக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக மற்றும் பாஜக தரப்பு இந்த கூட்டணியை முழுமையாக வரவேற்று அடுத்த கட்டமாக கூட்டணியில் யாரை சேர்ப்பது, எத்தனை தொகுதிகள் என பேச தொடங்கிவிட்ட நிலையில், திமுக கூட்டணியை அதிர்ச்சியடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாகவே நேற்று முன்தினம் இரவே, பழனிசாமி தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டதாக கனிமொழி எம்.பி. விமர்சித்ததாகவும், நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின், தோல்விக் கூட்டணி என்று தன் பங்குக்கு சாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு தகுந்த பதிலை அதிமுக தரப்பும் தெரிவித்து வருகிறது. இதுதவிர, திமுககூட்டணி கட்சியினரும் அதிமுகவை விமர்சித்து வருகின்றனர். திமுக கூட்டணி தவிர தவெகவும் பாஜகவுடனான அதிமுகவின் கூட்டணியை விமர்சித்துள்ளது.இந்த நிலையில், அதிமுக தரப்போ, திமுகவை வீழ்த்துவதே எங்கள் இலக்கு. அதற்கான கூட்டணியில் இணைந்துள்ளோம் என்று ஒரே வரியில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.