மும்பை,
சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மராட்டிய அரசின் வோர்லி போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த மிரட்டல் செய்தி வந்துள்ளது.சல்மான் கானை அவரது இல்லத்திலேயே வைத்துக் கொன்றுவிட்டு, அவரின் வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வோர்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சல்மான் கான் கடந்த 1998 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் படப்பிடிப்புக்கு சென்றிருந்தார். அப்போது, அரிய வகை பிளாக்பக் மான்களை வேட்டையாடியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றத்தை நாடி சல்மான் கான் ஜாமீன் பெற்றார். பிஷ்னோய் மக்களின் குருவான 16 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறுவடிவமாக பிளாக்பக் மான்கள் கருதப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சல்மான் கானை கொலை செய்வதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. பலமுறை வெளிப்படையாக கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். மத்திய அரசு தரப்பில் சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது