நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைப்பட விநியோகஸ்தர் என தமிழ் சினிமாவில் பல முகங்களாக இயங்கி வந்த கலைப்புலி ஜி.சேகரன் நேற்று காலமானார். அவருக்கு வயது 73.
திரையுலகினர் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வரும் சூழலில் ஜி,சேகரன் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்த நடிகர் கிங் காங்கிடம் பேசினோம்.

‘’எனக்கு சொந்த ஊர் வந்தவாசி. சினிமா ஆசையில் சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன். கையில காசு கூட போதுமானதா இல்லை.
சைதாப்பேட்டைனு நினைக்குறேன். அங்க இறங்கி எங்க போய் யார்கிட்ட வாய்ப்பு தேடறதுன்னு தெரியாம நின்னுகிட்டிருந்தேன். என் உருவத்தைப் பார்த்த மக்கள் கூட்டமா என்னை வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தாங்க.
அப்ப ரவிராஜ்னு ஒரு பத்திரிக்கைகாரர் எங்கிட்ட வந்து விசாரிச்சார். சினிமா ஆசை பத்தி அவர்கிட்டச் சொன்னதும் அவர் கோவைத்தம்பி சார் அலுவலகத்துல கொண்டு போய் விட்டார்.
அங்க பி.ஆர்.ஓ.விஜயமுரளி சார் பழக்கம் கிடைக்க, அவர்தான் கலைப்புலி சேகரன் சார் ஆபீஸ்க்குக் கூட்டிப் போனார்.
அப்பதான் ’ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்’ பட வேலைகள் நடந்துகிட்டிருந்துச்சு. அந்தப் படத்துல ‘என்ன சின்னம் பானை சின்னம்’னு ஒரு பாட்டு வரும். அந்தப் பாட்டு கேசட்டைப் போட்டு அதுக்கு ஆடச் சொன்னார் சேகரன் சார். நான் ஆடிக் காமிச்சதும் அவருக்குப் பிடிச்சுப் போச்சு. மறுநாளே ஷூட்டிங் வரச் சொல்லிட்டாங்க.
அந்தப் பாட்டு மூலம்தான் தமிழ் சினிமாவுல நான் அறிமுகமானேன்.
அதுல இருந்து என்னை அவருக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. கொஞ்ச நாள் அவருடைய ஆபீஸ்லயே தங்கிக்க அனுமதி தந்தார்.
அவருடைய எல்லா படங்கள்லயும் ஏதாவது ஒரு வேடம் கொடுத்துடுவார்.
என்னுடைய நிஜ பேர் சங்கர். கிங் காங்னு அவர்தான் வச்சார். முரண் நகையில இருக்கட்டுமேனு வச்சார். கிங் காங் மல்யுத்தம் ப்ளஸ் சினிமாவுல இருந்த ஒருத்தர் பெயர்.

எனக்குத் தொடர்ந்து வாய்ப்பு தந்ததால என் வாழ்க்கையிலயும் அவர் மறக்க முடியாத ஒருத்தரா ஆகிட்டார். அதனால என் கல்யாணத்தை அவர் தலைமையிலேயே நடத்த ஆசைப்பட்டு சொன்னேன். வடபழனியில் வச்சு நடத்தி வச்சார்.
கடைசியா மூணு மாசத்துக்கு முன்னாடி பேசினேன். ‘பார்த்து ரொம்ப நாள் ஆச்சு பார்க்க வரட்டுமா சார்’னு கேட்டேன். ‘எப்ப வேணும்னாலும் வாப்பா’னு சொன்னார்.
ஒரு நாள் போகணும்னு நினைச்சிட்டே இருந்தேன். அதுக்குள் இன்னைக்கு இப்படியொரு தகவல்’’ என்றபடி கண் கலங்கினார் கிங் காங்.