டெக்சாஸ்: ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் மூலம் பெண் பிரபலங்கள் மட்டும் அடங்கிய குழு விண்வெளிக்கு சென்று வந்துள்ளனர். இதில் பெசோஸின் காதலியான லாரன் சான்செஸும் பயணித்தார்.
அவருடன் விமானியும் முன்னாள் பத்திரிகையாளருமான சான்செஸ், பாடகர் மற்றும் பாடலாசிரியர் கேட்டி பெர்ரி மற்றும் ‘சிபிஎஸ் மார்னிங்ஸ்’ இணை தொகுப்பாளர் கெயில் கிங், திரைப்பட தயாரிப்பாளர் கெரியான் ஃப்ளின், முன்னாள் நாசா பொறியாளர் ஆயிஷா போவ், விஞ்ஞானி அமண்டா ஆகியோர் விண்வெளிக்கு பயணித்தனர். இந்த நேரப்படி ஏப்.14 மாலை 7 மணி அளவில் இந்த விண்வெளி பயணம் மேற்கொள்ளப்பட்டது.
அடுத்த 2 மாதங்களில் லாரன் சான்செஸை திருமணம் செய்ய உள்ளார் பெசோஸ். இந்த நிலையில் விண்வெளி பயணம் திட்டமிடப்பட்டது. மேற்கு டெக்சாஸில் இருந்து நியூ ஷெப்பர்ட் விண்கலன் மூலம் வெறும் சில நிமிடங்கள் மட்டுமே இந்த பயணம் திட்டமிடப்பட்டது. பயணத்தின் மொத்த நேரம் 10 நிமிடம் 21 விநாடிகள் என ப்ளூ ஆரிஜின் தெரிவித்துள்ளது. கார்மன் லைன் வரை சென்று இந்த விண்கலம் பூமி திரும்பி உள்ளது. இந்தப் பயணத்தின் போது விண்வெளியில் மிதந்து ஸீரோ கிராவிட்டியை ஆறு பேரும் உணர்ந்தனர்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 11-வது பயணமாக இது ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்துக்கு அமைந்தது. கடந்த 2021-ல் முதல்முறையாக விண்வெளி சுற்றுலா பயணத்தை தொடங்கியது ப்ளூ ஆரிஜின் நிறுவனம். கடந்த 60+ ஆண்டுகளில் முழுவதும் மகளிர் மட்டுமே பயணித்த இரண்டாவது விண்வெளி பயணமாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்பு ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை வாலண்டினா தெரஷ்கோவா, கடந்த 1963-ல் மூன்று நாட்கள் விண்வெளியில் செலவிட்டிருந்தார். அதில் அவர் மட்டுமே பயணித்திருந்தார்.
இந்த பயணத்துக்கான செலவு குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும், இதில் யார் எவ்வளவு பங்கு வழங்கினார்கள் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை. சுமார் 700-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் விண்வெளிக்கு இதுவரை சென்று வந்துள்ளது. இதில் பெண்களின் பங்கு 15 சதவீதம். விண்வெளி சுற்றுலா மூலம் வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.