புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி, பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது மிகவும் எளிதல்ல என பெங்களூருவைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்கிற தொழிலதிபர் தெரிவித்துள்ளார். இவர்தான் மெகுல் சோக்ஸியின் ஊழல்கள் குறித்து முதன்முதலில் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது மிகவும் எளிதல்ல. மேலும் விஜய் மல்லையா செய்து வருவதைப் போல இவரும் செய்ய வாய்ப்புள்ளது. ஏனெனில் மெகுல் சோக்ஸி பணபலம் மிக்கவர். அவர் ஐரோப்பாவில் சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி இக்குற்றத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவுக்கு அவரை நாடு கடத்துவது அவ்வளவு எளிதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. சோக்ஸி இந்தியாவில் இருந்து கொள்ளையடித்து, உலகம் எங்கும் பதுக்கி வைத்திருக்கும் பில்லியன் கணக்கான டாலர்களை திரும்பப் பெறுவதே மிக முக்கியமான விஷயம். ஆனால் இந்த முறை இந்திய அரசாங்கம் வெற்றிபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
சோக்ஸி தற்போது சட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருகிறார். அவருக்கு ஜாமீனுக்கு வாங்க அவரது பாதுகாப்பு குழு திட்டமிட்டுள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள சட்ட அமைப்பு மிகவும் வலுவானது, அதனால், நாடு கடத்தும் வழிமுறைகளை உரிய முறையில் செய்வார்கள்” என்றார்.
கடந்த ஜூலை 26, 2016 அன்று, பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹரி பிரசாத், இச்சம்பவம் தொடர்பான மோசடி குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு (PMO) கடிதம் எழுதியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
பின்னணி என்ன? – பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி மெகுல் சோக்ஸி மீது புகார் எழுந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக 2018-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து அவர் தலைமறைவானார்.
அவர் ஆன்டிகுவா தீவில் தஞ்சமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வந்தன. இந்தச் சூழலில், ஆன்டிகுவா தீவில் இருந்து சிகிச்சை பெறுவதற்காக அவர் பெல்ஜியம் வந்தார். கடந்த ஆண்டு முதல் அவர் பெல்ஜியத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி, பெல்ஜியத்தில் அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவின் நாடு கடத்தல் தொடர்பான கோரிக்கையை ஏற்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.