"ராமதாஸை வசை பாடிய திலகபாமா கட்சியிலிருந்து வெளியேறி விடுவது நல்லது!" – வெடிக்கும் வடிவேலு இராவணன்

சில நாட்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் அன்புமணிக்கும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர். ராமதாஸுக்கும் மோதல் ஏற்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாகவும் கூறினார்கள்.

அதையடுத்து பா.ம.க-வின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை அதன் நிறுவனர் டிஸ்மிஸ் செய்திருந்தார். இந்த விவகாரம் அரசியல் சூழலில் பெரும் பேசுபொருளானது.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

இதன் பிறகும் அன்புமணி நான்தான் தலைவர் என அறிக்கை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பா.ம.க-வின் நிறுவனர் ராமதாஸ் ஜனநாயகப் படுகொலை செய்துவிட்டார் என இந்த விவகாரத்தில் அவரை விமர்சித்து அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா கூறியிருந்தார்.

தற்போது திலகபாமாவின் செயலைக் கண்டித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேலு இராவணன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அவர், ” பாட்டாளி மக்கள் கட்சியின் அண்மை நிகழ்வுகள் பற்றிக் கட்சியின் பொருளாளராக இருக்கும் திலகபாமா என்பவர் கூறுகையில், `பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எல்லா நிலைகளிலும் சரியான முடிவெடுத்துச் சரியான செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவார். இப்போது தவறான முடிவெடுத்து இருக்கிறார்.

இது ஒரு ஜனநாயகப் படுகொலை’ என்று சிறிதும் பொருளற்ற முறையில் சிறுபிள்ளைத்தனமாக ராமதாஸ் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். பா.ம.க.வின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது.

வடிவேல் இராவணன்
வடிவேல் இராவணன்

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மேற்கொண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளாதவர். திலகபாமா பாட்டாளி மக்களின் தோழர் அல்லர்.

மேட்டுக் குடியினம். பெண்களுக்குத் தலைமையில், அதுவும் பொருளாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று ராமதாஸின் பரிந்துரையிலும், ஆதரவிலும் பதவி பெற்றவர். பல மாவட்டங்களில் பல ஆண்டுகளாக பாடுபட்டு வந்த பாட்டாளி சொந்தங்களை விரட்டி அடித்தவர். உடனிருந்தே கொள்ளும் நோய் இவர்.

அரசியல் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு இவர். பாட்டாளிகளின் உயிரியக்கமான பா.ம.க.வை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி. தமிழகத்திலேயே ஏன், இந்தியாவிலேயே ஜனநாயகப் பண்புள்ள ஒரே கட்சி பா.ம.க. ஜனநாயக மரபுகளையும், சமூக நீதிக் கோட்பாட்டினையும் கட்சிக்குள்ளே பேணிக் காத்து வரும் ஒரே தலைவர் ராமதாஸ்.

அரசியல் கட்சிகள் கடந்து அனைவராலும் பாராட்டப்பெறும் ஒரே தலைவர். அவர் விடுக்கும் அறிக்கைகளே அனைவருக்கும் அரசியல் அகரமுதலி. ராமதாஸை ஜனநாயகப் படுகொலை செய்தவர் என்று நெஞ்சிலே வஞ்சக எண்ணத்தோடு சொற்களை அள்ளி வீசிய திலகபாமாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

திலகபாமா
திலகபாமா

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். பல்வேறு மாநில பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றி வந்த நான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறேன். நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி ராமதாஸை வசை பாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவதுதான் அவருக்கு நல்லது.

திமுக தலைவர் கலைஞர் போன்றவர்களே தைலாபுரத்திலிருந்து எப்போது தைலம் வரும் என்று காத்திருக்கையில், நேற்று முளைத்த காளான்கள் அவரை வசை பாடுவதுதான் பேரவலம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.