பாட்னா: ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்ய தவறிய வக்பு வாரியங்கள், முறைகேடுகளின் கூடாரங்களாக திகழ்கின்றன என பிஹார் ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.
வக்பு சட்ட திருத்தம் குறித்து பிஹார் ஆளுநர் ஆரிப் முகமது கான் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மதபாகுபாடு இன்றி ஏழைகள், ஆதரவற்றவர்கள், பின்தங்கியவர்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கத்தோடுதான் வக்பு வாரியங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், ஆதரவற்றவர்களின் தேவைகளை நிறைவேற்ற வக்பு வாரிய சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதில்லை. இங்கு சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படாமல் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன. தவறான நிர்வாகம் காரணமாக வக்பு வாரிங்களின் மீதான நம்பிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது.
என்ன நோக்கத்துக்காக வக்பு சொத்துக்கள் தானம் அளிக்கப்பட்டதோ, அதற்காக அவற்றை பயன்படுத்துவது நிருபிக்கப்படவில்லை. அதனால்தான் வக்பு சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. லக்னோ, டெல்லி, பாட்னா போன்ற பல இடங்களில் உள்ள வக்பு வாரியங்களின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகளாக உள்ளன. அங்கு வர்த்தக கட்டிடங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் உள்ளன. இங்கு சீர்திருத்தங்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன.
உத்தரபிரதேசத்தில் நான் அமைச்சராக இருந்துள்ளேன். அப்போது பெரும்பாலான வக்பு வாரியங்களின் சொத்துக்கள் தானம் அளித்தவர்களின் வாரிசுதாரர்களின் நலனுக்காகத்தான் பயன்படுத்தப்பட்டன. பல தலைமுறைகளாக இதற்கு உரிமை கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது. ஆனால், இதன் நிர்வாகத்தை ஒரே ஒரு மேலாளர் மட்டும் கவனித்து வருகிறார். இந்த விவகாரம், மதப் பிரச்சினை அல்ல, துஷ்பிரயோக விவகாரம்.
வக்பு வாரிய சொத்துக்கள், மதபாகுபாடின்றி ஆதரவற்ற அனைத்துப் பிரிவு மக்களுக்கும்தான். அதனால்தான் வக்பு வாரிய சொத்துக்களை மேற்பார்வையிட் முஸ்லிம் அல்லாத நபர் ஒருவரை சேர்க்க வேண்டும் என வக்பு சட்ட திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம் அல்லாதவர்களையும் கவனிக்க வேண்டும் என்றுதான் முஸ்லிம் சட்டம் கூறுகிறது. அது வக்புவை உருவாக்க வேண்டும் என கூறவில்லை.
வக்பு வாரிய சொத்துக்களை பாஜக கொள்ளையடிப்பதாக மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைஸி குற்றம் சாட்டுகிறார். ஆனால், ஹைதராபாத்தில் உள்ள தர்-உஸ்-சலாம் சொத்துக்கள் அனைத்தும் மஜ்லிஸ் கட்சியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்த சொத்துக்கள் எல்லாம் தனிப்பட்ட ஆதாயத்துக்காக தவறாக பயன்படுத்தப்படுகின்றன. அறக்கட்டளை பணிக்காக பயன்படுத்தப்படுவதில்லை.
இவ்வாறு ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.