பலரின் விருப்பமான, ஸ்டைலான ஆடையாக லெகிங்ஸ் உள்ளது. யோகா செய்யும்போது முதல் விமானத்தில் பயணிக்கும் போது வரை என எல்லா இடங்களுக்கும் லெகிங்ஸ் அணிந்து செல்கின்றனர்.
பொதுவாக இது போன்ற இறுக்கமான ஆடைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், விமானத்தில் பயணிக்கும் போதும் இது போன்ற ஆடைகளை தவிர்க்க விமான பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எதற்காக விமானத்தில் பயணிக்கும்போது லெகிங்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகள் அணிவது ஆபத்து என்று கூறுகின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

2017 ஆம் ஆண்டில் யுனைடெட் ஏர்லைன்ஸ் இரண்டு சிறுமிகளை, அவர்கள் அணிந்திருக்கும் லெகின்ஸ் ஆடை காரணமாக விமானத்தில் ஏற தடுத்ததாக சில சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் அதற்குப் பின்னால் இவ்வளவு காரணங்கள் இருக்கின்றதா?
விமானத்தில் பயணிக்கும் போது ஸ்டைலாகவும் சௌகரியமாகவும் இருக்கும் என்பதற்காக பலரும் லெகிங்ஸ்- யை அணிகிறார்கள். ஆனால் இது போன்ற ஆடைகளை தவிர்க்க வேண்டுமென விமான பாதுகாப்பு நிபுணர் கிறிஸ்டின் நெக்ரோனி கூறுகிறார்.
லெகிங்ஸ் செயற்கை இழைகள் (synthetic fibers) கொண்ட ஆடைகளாக உள்ளன. செயற்கை இழைகள் (synthetic fibers) பெட்ரோலியம் போன்ற மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.

நைலான், பாலியஸ்டர் போன்றவை செயற்கை இழைகளால் தயாரிக்கப்படுகின்றன. இவை எளிதில் தீப்பிடித்து தோல்களில் ஒட்டிக் கொள்ளும். இயற்கை இழைகளால் ஆன ஆடைகளும் தீ பிடிக்கக்கூடும் என்றாலும் இது போன்ற செயற்கைப் பொருள்கள் உடலையே உருக்கும் என்பதால் இதனை தவிர்க்க வலியுறுத்துகின்றனர்.
மேலும் தீக்காய ஆபத்து குறைவாக உள்ள இயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதை அறிவுறுத்துகின்றனர். நகரும் திறனை கட்டுப்படுத்தும் ஆடைகளையும் தவிர்க்க வலியுறுத்துகின்றனர்.
மற்றொரு காரணம் நாம் இறுக்கமான உடை அணியும் போது அவை ரத்த ஓட்டத்தை குறைக்கும். இதனால் வீக்கம், வலி, நரம்பு சுருண்டு கொள்ளுதல் போன்ற உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். விமானத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து பயணிக்க வேண்டியிருக்கும். இதனாலும் இது போன்ற ஆடைகளை தவிர்க்க வலியுறுத்துகின்றனர்.