LSG vs CSK: ஐபிஎல் தொடரில் (IPL 2025) தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் திண்டாடி வருகிறது. தொடர் தோல்விகளை பெற்று வந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓரளவுக்கு முன்னேற்றத்தை கண்டுள்ளன. அந்த அணிகளைப் போல சிஎஸ்கேவும் மீண்டெழுந்து முன்னேற்றம் அடையுமா? என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
LSG vs CSK: சிஎஸ்கேவுக்கு முக்கியமான போட்டி
அந்த வகையில், இன்று லக்னோ எக்னா கிரிக்கெட் மைதானத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (Lucknow Super Giants) அணியுடன், எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி மோதுகிறது. மிகுந்த பரபரப்புக்கு நடுவே இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.
LSG vs CSK: சிஎஸ்கேவுக்கு லாஸ்ட் சான்ஸ்
சிஎஸ்கேவுக்கு (CSK) மீதம் இருக்கும் எட்டு போட்டிகளில் குறைந்தபட்சம் 7 போட்டிகளிலாவது வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே அணியால் தகுதி பெற முடியும். ஒரு வேளை இன்றும் சிஎஸ்கே தோல்வி அடைந்துவிட்டால், பிளேஆப் போகக்கூடிய வாய்ப்பு ஒரு சதவீதத்திற்கும் கீழாக குறைந்து விடும் எனலாம். எனவே, சிஎஸ்கே அணி லக்னோவை எப்படியாவது வீழ்த்தவே துடிக்கும்.
LSG vs CSK: உச்சக்கட்ட பார்மில் நிக்கோலஸ் பூரன்
ஆனால், சிஎஸ்கேவுக்கு பெரிய பிரச்னையாக இருக்கப்போவது நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) மட்டும்தான். திக்வேஷ் ரத்தி, ஷர்துல் தாக்கூர், எய்டன் மார்க்ரம், ரிஷப் பண்ட் என சிறப்பான வீரர்கள் வரிசைக்கட்டி நின்றாலும் நிக்கோலஸ் பூரனை தடுப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இவர் விளையாடிய 6 இன்னிங்ஸில் 26 பவுண்டரிகள், 31 சிக்ஸர்கள் உள்பட 349 ரன்களை குவித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 215.43 ஆக உள்ளது. சராசரியோ 69.80. இதில் 4 அரைசதங்கள், 1 நாட் அவுட்டாகும்.
LSG vs CSK: நிக்கோலஸ் பூரன் vs சிஎஸ்கே
அதாவது இன்றைய போட்டி லக்னோ vs சிஎஸ்கே இல்லை… நிக்கோலஸ் பூரன் vs சிஎஸ்கே (Nicholas Pooran vs CSK) என்றுதான் சொல்ல வேண்டும். நிக்கோலஸ் பூரன் இதுவரை 6 இன்னிங்ஸில் 31 சிக்ஸர்களை அடித்துள்ளார். ஆனால், ஒட்டுமொத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே இந்த சீசனில் 32 சிக்ஸர்களைதான் அடித்துள்ளது. இந்நிலையில், சிஎஸ்கேவை நிக்கோலஸ் பூரன் முந்துவாரா, சிஎஸ்கே அதை தடுக்குமா என்பதுதான் பெரிய கேள்வியாகவும் உள்ளது.
LSG vs CSK: நிக்கோலஸ் பூரனை அடக்கப்போவது யார்?
இப்படி ஒரு முரட்டு பார்மில் நிக்கோலஸ் பூரன் இதுவரை ரஷித் கான், யுஸ்வேந்திர சஹால் ஆகிய இரண்டு லெக் ஸ்பின்னர்களிடம் இந்த தொடரில் ஆட்டமிழந்துள்ளார். மும்பை போட்டியில் மட்டுமே அவர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதுவும் ஹர்திக் பாண்டியாவின் பவுண்சருக்கு… ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோரிலாயே அவரை 70 ரன்களுக்கு மேல்தான் ஆட்டமிழக்க வைக்க முடிந்தது.
லக்னோ ஆடுகளம் எப்போதுமே பேட்டிங்கிற்கு பெரியளவில் சாதகமாக இருக்காது. ஆனால், கடந்த பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற்ற WPL தொடரில் இருந்தே இந்த மைதானத்தில் ரன்கள் அதிகமாக அடிக்கப்பட்டு வருகிறது. நிச்சயம் முதல் பேட்டிங் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நிக்கோலஸ் பூரனுக்கு ஏற்றச் சூழலை கொண்ட இந்த மைதானத்தில் அவரை நிறுத்த தோனி என்ன செய்யப்போகிறார் என்ற கேள்விதான் தற்போது பலரின் மனதிலும் இருக்கிறது.
LSG vs CSK: நூர் அகமது vs அஸ்வின், ஜடேஜா, நூர் அமகது
பதிரானாவை முன்னரே கொண்டுவரப் போகிறாரா, சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து தாக்குதல் தொடுக்கப்போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அஸ்வினுக்கு எதிராக 107 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள பூரன், 5 போட்டிகளில் அஸ்வினை எதிர்கொண்டு 1 முறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார். ஜடேஜாவையும் 5 போட்டிகளில் எதிர்கொண்டுள்ள பூரன் 164 ஸ்ட்ரைக் ரேட்டை அவருக்கு எதிராக வைத்திருக்கிறார்.
நூர் அமகதுதான் (Noor Ahmad) பூரனுக்கு ஓரளவு தொந்தரவு அளிப்பார் என கூறப்படுகிறது. காரணம், ஐபிஎல் தொடரில் 3 இன்னிங்ஸில் நூர் அகமதை எதிர்கொண்டு 2 முறை ஆட்டமிழந்துள்ளார். அதிலும் வெறும் 2 ரன்களையே அடித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 25 ஆக உள்ளது. மொத்த டி20 தொடர்களில் 5 இன்னிங்ஸில் நூர் அகமதை நிக்கோலஸ் பூரன் எதிர்கொண்டுள்ளார். அதில் 13 ரன்களை அடித்து 50 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். மொத்தமாக 2 முறையே நிக்கோலஸ் பூரனை நூர் அகமது ஆட்டமிழக்க வைத்துள்ளார். எனவே, தோனி நூர் அகமதை பவர்பிளேவிலேயே கொண்டுவந்துவிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
மேலும் படிக்க | தோனி, அஷ்வினுக்கு மூளை வேலை செய்யவில்லையா? மனோஜ் திவாரி காட்டம்!