சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகியிருந்த ‘அமரன்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த திரைப்படங்களுக்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்க, அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இதனைத் தாண்டி, சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருக்கும் ‘மதராஸி’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள்.
‘மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீஸ் தேதியை அறிவித்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “Between rage and redemption, stands one man” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு விஜய்யின் ‘கோட்’ திரைப்படமும் இதே தேதியில்தான் வெளியாகியிருந்தது. அப்படத்திலும் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
முருகதாஸ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிஜு மேனன், விக்ராந்த், வித்யுத் ஜம்வால், ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்திற்குப் பிறகு இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் தொடர்பாக, “வட இந்தியர்களின் பார்வையிலிருந்து படத்தின் கதை தொடங்கும்.

தென் இந்தியர்களை வட இந்தியர்கள் ‘மதராஸி’ என்ற வார்த்தையை வைத்துத்தான் அடையாளப்படுத்துவார்கள். தற்போது அந்த வார்த்தையை உபயோகப்படுத்துவது குறைந்துவிட்டது. இந்தப் படம் வட இந்தியர்கள் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றியதுதான். அதனால் இந்தத் தலைப்பு சரியானதாக இருந்தது. சிவகார்த்திகேயன் ஏற்கெனவே ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படம் நிச்சயமாக அவரை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும். இத்திரைப்படத்தில் அவருக்கு ரக்கடான லுக் இருக்கும். இந்தக் கதாபாத்திரம் அவருடைய தோற்றத்தைப் பற்றி பெரிதும் சிந்திக்காத வகையில் இருக்கும்,” எனக் கடந்த பிப்ரவரி மாதம் அளித்த பேட்டியில் முருகதாஸ் கூறியிருந்தார்.
முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்திருந்த ‘சிக்கந்தர்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.