`எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு'- கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக ஒ.செ மீது புகார்- என்ன நடந்தது?

ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வசந்த், கள்ளர் படைப்பற்று நலசங்கத்தின் மாநிலத் தலைவர். இவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசி அது குறித்த ஆடியோவை வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அதிமுக-வின் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆசைதம்பி பத்துக்கும் மேற்பட்ட நபர்களுடன் வசந்த் வீட்டுக்குச் சென்று மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஆசைதம்பி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் வசந்த். இதைத் தொடர்ந்து அவதூறாகப் பேசியதாக ஆசைதம்பியும் வசந்த் மீது புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் அதிமுக வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

இது குறித்து வசந்திடம் பேசினோம். “குற்றப்பரம்பரையை சேர்ந்தவர்களை அதிமுக-வில் சேர்த்து கொள்ள மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக வீடியோ ஒன்றை பார்த்தேன். இது தொடர்பாக எனது கருத்தை என்னுடைய குரலில் பதிவு செய்து வாட்ஸப் குரூப்பில் போட்டேன். சசிகலாவால் முதலமைச்சர் ஆகி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த இவர், முக்குலத்தோர் குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. மேலும் அதிமுக-வில் உள்ள முக்குலத்தோர் கட்சியை விட்டு வெளியே வர வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தேன். இந்த நிலையில், அதிமுக-வின் மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் எனக்கு நெருக்கமான உறவினர்களுக்கு போன் செய்து, ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார்… இது சரியில்லை, இத்துடன் நிறுத்திக்கொள்ள சொல்லுங்கள், இது நல்லதில்லை எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை ஒன்றிய செயலாளர் ஆசைதம்பி எனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது நான் அங்கு இல்லை. என் அம்மாவிடம் இனி உன் மகன் வெளியில் நடமாட முடியாது, அவன் ஒரத்தநாடு வந்தால் தெரியும் என்ன நடக்கும் என்று மிரட்டி விட்டுச் சென்றார்.

டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த என்னிடம் வந்து, இது மாதிரி பேசிக்கொண்டிருந்தாய் நடப்பதே வேறு நடமாட முடியாது பார்த்துக்கொள் என மிரட்டி விட்டுச் சென்றார். மா.சேகர் உறவினர்களிடம் பேசியதை நான் கண்டுகொள்ளவில்லை, பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் பிறகு ஆசைதம்பி மூலம் எனக்கு மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஆசைதம்பி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸில் புகார் அளித்துள்ளேன். இது போன்ற மிரட்டல் தொடர்ந்தால் முக்குலத்தோர் அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவதற்கும் தயாராக இருக்கிறேன்” என்றார்.

வசந்த்

ஆசைதம்பியிடம் பேசினோம். “எங்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசி வாட்ஸ்அப்பில் பதிவிட்டார். ஏன் இப்படி பொய்யான தகவலை சொல்கிறீர்கள் என கேட்டதற்கு முறையான பதிலும் சொல்லவில்லை. இனி இப்படி செய்யாதீர்கள் என சொல்லி விட்டு வந்தோம், மிரட்டவில்லை. நானும் அவர் மீது அவதூறாகப் பேசியதாக புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.

இது குறித்து சிலரிடம் பேசினோம். “அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி உறுதியான நிலையில், அமமுக, ஓ.பி.எஸ் அணிகளும் இதில் இடம் பிடிப்பது முடிவாகி விட்டது. இந்த நிலையில் ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் வைத்திலிங்கம் தொடர்ந்து ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். இந்த முறையும் அவரே போட்டியிடுவார் என்கிறார்கள்.

இப்படியான சூழலில் வரும் சட்டமன்றத் தேர்தலில் மா.சேகர் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கான முயற்சியில் இருக்கிறார். இந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பேசிய நபரை எதிர்த்தால் எடப்பாடி பழனிசாமியின் குட்புக்கில் இடம் பிடிக்கலாம் என்றுதான் மா.சேகர் முதலில் பேசியிருக்கிறார். பின்னர் ஆசைதம்பியை அனுப்பியிருக்கிறார். ஆனால் இந்த விவகாரம் போலீஸ் புகார் வரை செல்லும் என மா.சேகர் எதிர்பார்க்கவில்லை. அவர் நினைத்தது ஒன்று ஆனால் வேறொன்று நடந்து விட்டது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.