லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 63 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 167 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 19.3 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 168 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஷிவம் துபே 43 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆட்டம் முடிந்த பின்னர் சென்னை வீரர் ஷிவம் துபே அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த வெற்றி பெரியது. சி.எஸ்.கே. 5 தொடர்ச்சியான தோல்விகளை பெறக்கூடிய அணி கிடையாது. இன்று (நேற்று) எங்களுடைய பவுலர்கள் நன்றாக பவுலிங் செய்தனர். இன்று (நேற்று) நான் கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்று விரும்பினேன். போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று நாம் முடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
மிடில் ஆர்டரில் சில விக்கெட்டுகளை இழந்ததும் இதுவே அதற்கான நாள் என்று முடிவு செய்தேன். இவை அனைத்தும் அட்டாக் செய்வதற்குப் பதிலாக சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டிய மனநிலைப் பற்றியதாகும். கடைசி வரை போட்டியை எடுத்துச் செல்வது சிறந்த ஆப்ஷன் என்று உணர்ந்தேன்.
ஒவ்வொரு பந்தையும் கடினமாக அடிக்காமல் விளையாட வேண்டும் என்பதே எனது திட்டம். ஏனெனில், எதிரணி பவுலர்களும் நன்றாக பவுலிங் செய்தனர். இப்போட்டியிலிருந்து நிறைய நேர்மறையான விஷயங்களை அடுத்தப் போட்டிக்கு எடுத்துச் செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.