தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்து, தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மகாவீர் ஜெயந்தி, தமிழ்புத்தாண்டு, வார விடுமுறைகள் என 5 நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் அவை கூடியது. இந்த நிலையில், ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மாநில சுயாட்சி தொடர்பாக சட்டப்பேரவை விதி 110 கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு பேசினார். முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போதே அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், “கேள்வி நேரம் முடியும் வரை அமைதியாக இருந்தோம். பூஜ்ய நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்ப சட்டமன்ற அவைத் தலைவரிடம் அனுமதி கேட்டபோது, பல்வேறு காரணங்களைக் கூறி தட்டிக்கழிக்கிறார்ரே தவிர பேசுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. பேரவை விதி 72-ன் கீழ், அமைச்சர்கள் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது விவாதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். ஆனால் சபாநாயகர் தொடர்ந்து ஜனநாயக படுகொலையை செய்துவருகிறார்.” என்றார்.