மும்பை: நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் குஜராத்தைச் சேர்ந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் ஹெல்ப்லைனுக்கு நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஒரு செய்தி வந்தது, அதில் அனுப்புநர் சல்மான் கானின் காரை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், அவரை அவரது வீட்டிற்குள் நுழைந்து தாக்கப்போவதாகவும் மிரட்டி இருந்தார்.
இதையடுத்து, இது குறித்து பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 351 இன் கீழ் அப்போதைய நிலையில் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்த மும்பை வோர்லி போலீஸார், பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கானின் வீட்டுக்கு பாதுகாப்பை பலப்படுத்தினர்.
கொலை மிரட்டல் விடுத்தவர் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மிரட்டல் விடுத்தவர் குஜராத்தின் வதோதரா மாவட்டத்தின் வாகோடியா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, மும்பை மற்றும் குஜராத் போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். மிரட்டல் விடுத்த நபர் மனநிலை சரியில்லாதவர் என்பது அப்போது தெரியவந்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வடோதரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஆனந்த், “திங்கட்கிழமை வாகோடியா போலீஸாருடன் சேர்ந்து மும்பை காவல்துறையினர் குழு, வாகோடியாவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்றது. மிரட்டல் செய்தியை அனுப்பிய 26 வயது நபர் மனநிலை சரியில்லாதவர் என்பதும், அவருக்கு சிகிச்சை நடந்து வருவதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, மும்பை போலீஸார் அவருக்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றனர்.” என்று தெரிவித்தார்.