விஜே பாவனா, சிவகார்த்திகேயன் இருவரும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக பல நிகழ்ச்சிகளை ஒன்றாகத் தொகுத்து வழங்கியிருக்கின்றனர். நெருங்கிய நண்பர்களாக இருவருமே அவரவர் பாதையில் படிப்படியாக முன்னேறி, வளர்ச்சியடைந்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் நடிகராகவும், பாவனா தொகுப்பாளராகவும் பிரபலமடைந்திருக்கின்றனர்.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவருடன் பணியாற்றிய பலரும் அவரது உழைப்புப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கின்றனர். சிவகார்த்திகேயனின் கரியரின் ஆரம்பத்திலிருந்தே நெருங்கிய தோழியாக இருக்கும் பாவனா, சமீபத்திய ‘Holistic Therapist Gayathri’ எனற யூடியூப் சேனல் பாட்காஸ்ட் ஒன்றில் சிவகார்த்திகேயன் பற்றி பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
அதில் தொலைகாட்சியில் இருக்கும் நட்பு, தூரோகம், டாக்ஸிக் என பலவற்றைப் பற்றி பேசியிருந்தார். அப்போது சிவகார்த்திகேயன் பற்றி பேசியிருக்கும் பாவனா, “சிவகார்த்திகேயனின் போராட்டக் குணம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். துரோகம், வளர்ச்சியைத் தடுப்பது என அவருக்கும் யாராவது ஏதாவது செய்தால், அதையெல்லாம் உடைத்து பல மடங்கு வளர்ச்சியடைந்து சாதித்துவிட்டு வந்து, மீண்டும் அவர்களுடன் அன்புடன் இயல்பாகப் பழகுவார்.

அவர் அப்படித்தான் கெடுதல் நினைப்பவர்களுக்குப் பதிலடி கொடுப்பார். அதுதான் அவரது போராட்டக் குணம். அது எனக்கு வியப்பாக இருக்கும். ஒருவர் உங்களுக்கு கெடுதல், துரோகம் செய்தால் அவர் தொட முடியாத உயரத்திற்கு வளர்ந்துவிடுங்கள். அப்போது அவர்களால் உங்களை ஏதும் செய்ய முடியாது. அதுதான் சிறந்த பதிலடியாக இருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ” என்று பேசியிருக்கிறார்.