சென்னை: ‘சாட்டை’ துரைமுருகன் நடத்தும் ‘சாட்டை’ யூடியூப் சேனலுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “துரைமுருகன் நடத்தும் சாட்டை யூடியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதில் வரும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். அவற்றுக்கு நாம் தமிழர் கட்சி எந்த வகையிலும் பொறுப்பாகாது” என தெரிவித்துள்ளார்.
தற்போது நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு பக்க பலமாக இருந்து வருபவர்களில் ஒருவர்தான் கொள்கை பரப்புச் செயலாளர் ‘சாட்டை’ துரைமுருகன். சமீபத்தில் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், நயினார் நாகேந்திரன் இஸ்லாமியருக்கு எதிரானவர் அல்ல என்பது போன்ற கருத்துகளை அவர் பேசியிருந்தார்.
ஏற்கெனவே நாம் தமிழர் கட்சி, பாஜகவின் ‘பி’ டீம் என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், நயினார் நாகேந்திரனை சாட்டை துரைமுருகன் பகிரங்கமாக பாராட்டி பேசியிருப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த நிலையில்தான், துரைமுருகன் நடத்தும் ‘சாட்டை’ சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பு இல்லை என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.