புதுடெல்லி: அம்பேத்கரின் பிறந்த தினத்தை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நாடு முழுவதும் நேற்று அம்பேத்கர் பிறந்த தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அந்த கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோரும் அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பாபா சாஹேப் அம்பேத்கர் ஒரு பொருளாதார நிபுணர், கல்வியாளர், சட்ட மேதை, சமூக சீர்திருத்தவாதி. தனது வாழ்நாள் முழுவதும் பட்டியலின மக்கள், பெண்களின் முன்னேற்றத்துக்காக அவர் போராடினார். அவரது பங்களிப்புகள் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும். அம்பேத்கரின் லட்சியங்களை ஏற்று சமூக நல்லிணக்கம், சமத்துவ உணர்வை வெளிப்படுத்தும் தேசத்தை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “அம்பேத்கரின் பிறந்த நாளில் அவருக்கு தலைவணங்குகிறேன். அவரது வழிகாட்டுதலில் சமூக நீதி கனவு, நனவாகி உள்ளது. அவரது கொள்கைகள், சிந்தனைகள் சுயசார்பு, வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க உத்வேகம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் அம்பேத்கரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தி உள்ளனர்.