மாசு ஏற்படுத்தாமல் கொடுங்கையூரில் எரிஉலை திட்டம் செயல்படுத்தப்படும்: ரீ-சஸ்டெய்னபில் நிறுவன மேலாண் இயக்குநர் உறுதி

இந்தியாவில் 4,416 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து நாளொன்றுக்கு 1.60 லட்சம் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றில் 31.7 சதவீத குப்பைகள் என்ன செய்யப்படுகிறது என்ற தரவுகள் இல்லை என மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. கொட்டுவதற்கு போதிய இடம் இன்றி ஏரிகள், ஆறு மற்றும் கால்வாய் கரைகளில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

இது தொடர்பான வழக்குகளில் குப்பைகளை கொட்ட மாற்று இடங்களை தேர்வு செய்யாவிட்டால், அபராதம் விதிக்க நேரிடும் என பசுமை தீர்ப்பாயம் எச்சரித்தாலும், “அபராதத்தை கூட செலுத்திவிடுகிறோம். எங்களால் இடத்தை தேர்வு செய்ய முடியவில்லை” என உள்ளாட்சி அமைப்புகள் பதில் அளிக்கின்றன. அந்த அளவுக்கு குப்பை மேலாண்மை, நகரப்புற உள்ளாட்சிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

இதற்கு தீர்வுகாண ரீ சஸ்டெய்னபிள் என்ற நிறுவனம் ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட மாநகரங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது, கட்டுமான கழிவுகளில் இருந்து மணல், ஜல்லி கற்கள், இரும்பு போன்றவற்றை பிரித்து மீண்டும் பயன்படுத்த வகை செய்கிறது. மக்கும் கழிவுகளில் இருந்து எரிவாயு, உரம் உற்பத்தி செய்கிறது. மக்காத கழிவுகளை எரித்து மின்சாரம் தயாரிக்கிறது. இதன் மூலம் நிலத்தில் கழிவாக கொட்டப்படும் குப்பையின் அளவு குறைகிறது.

இந்நிறுவனத்தின் தெலங்கானா மாநிலம், ஜவஹர் நகரில் உள்ள 1200 டன் கழிவிலிருந்து 24 மெகாவாட் திறன் கொண்ட மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை, துன்டிகல் பகுதியில் இயங்கும் 500 டன் கழிவிலிருந்து 14 மெகாவாட் திறன் கொண்ட மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை மையங்களை நேரில் பார்வையிட்டபோது, அந்த வளாகமே தூய்மையாக இருந்தது, சாம்பல் படிமங்கள் ஏதும் தென்படவில்லை. புகைப்போக்கியில் புகையோ, சாம்பலோ வெளியேறவில்லை.

இது தொடர்பாக நிலைய தொழில்நுட்ப அலுவலர்களிடம் கேட்டபோது, இங்கு குப்பையை எரிப்பதால் வெளியேறும் புகை மற்றும் சாம்பல் கலந்த காற்றை, நீரில் செலுத்தி, துகள்கள் வெளியேறாமல் தடுக்கிறோம்.

அமில வாயுக்களை நடுநிலையாக்க கோபுரத்தில் சுண்ணாம்பு கரைசல் தெளிக்கப்படுகிறது. கன உலோகங்கள் செல்வதும் ஆக்டிவேட்டட் கார்பன் முறையில் தடுக்கப்படுகிறது. தூசி வடிகட்டுதல் மூலம் வடிகட்டப்படுவதால், தூசி வெளியேறுவதில்லை. மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் நேரடியாக ஆன்லைனில் பார்வையிடும் வசதியை ஏற்படுத்தி இருக்கிறோம்.

ஒருவேளை மாசு வெளியேறினால் உடனுக்குடன் நிலைய அலுவலர்களுக்கும், மத்திய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு தகவல் சென்றுவிடும். மேலும் எரிஉலையின் செயல்பாடுகள் மற்றும் மாசு வெளியேற்றத்தை 24 மணி நேரமும் அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான டெல்லி எம்.எஸ்.டபிள்யூ சொல்யூஷன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை கொடுங்கையூரில் ரூ.1600 கோடியில் எரிஉலை உள்ளிட்ட ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை விரைவில் தொடங்க உள்ளது. 3 ஆண்டுகளில் பணிகளை முடித்து உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக கொடுங்கையூர் குப்பை கிடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ரீ சஸ்டெய்னபிள் நிறுவன எம்டி மற்றும் சிஇஓ மசூத் மாலிக் கூறியதாவது: வட்ட பொருளாதார திட்டப்படி, கொடுங்கையூரில் செயல்படுத்தப்படும் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் இந்திய அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

சிக்கலான நகர்ப்புற சவால்களைச் சமாளிக்க ரீ சஸ்டெய்னபிள் நிறுவனம் மூலம் சிறந்த தொழில்நுட்பத்தையும், உலகளாவிய சிறந்த நடைமுறைகளையும் கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

இந்தத் திட்டம் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு மட்டுமல்லாமல், அதை ஒரு மதிப்புமிக்க வளமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாசற்ற மின்சாரத்தை உருவாக்குதல், பொருட்களை மீட்டெடுப்பது, சென்னையின் தூய்மையான, பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான இந்த பணியில் பங்கேற்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.