பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதி. இவருக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கோர்ட்டு உத்தரவின் பேரில் நில முறைகேட்டில் மைசூரு லோக் அயுக்தா போலீசார், முதல்-மந்திரி சித்தராமையா, அவரது மனைவி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
பின்னர் நில முறைகேட்டில் சித்தராமையா, அவரது மனைவி குற்றமற்றவர்கள் என்று கூறி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மைசூரு லோக் அயுக்தா போலீசார் பி அறிக்கை தாக்கல் செய்தார்கள். இதனால் சித்தராமையா நிம்மதி அடைந்தார். லோக் அயுக்தா போலீசாரின் அறிக்கைக்கு சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா, பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதே நேரத்தில் நில முறைகேடு வழக்கில் லோக் அயுக்தா போலீசாரின் அறிக்கைக்கு தடை விதிக்கும்படி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் சினேகமயி கிருஷ்ணா, அமலாக்கத்துறையினர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை சந்தோஷ் கஜனன பட் முன்னிலையில் நடைபெற்றது. அந்த மனு மீதான விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து ஏப்ரல் 15-ந்தேதி (அதாவது இன்று) தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட உள்ளது. லோக் அயுக்தா அறிக்கை தள்ளுபடி செய்யப்படுமா? அல்லது அறிக்கை சரி என்று தீர்ப்பு வருமா? என்பது தெரியவில்லை. லோக் அயுக்தா அறிக்கை தள்ளுபடி செய்யப்பட்டால், நில முறைகேட்டில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.