புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது தொடர்பாக நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் துலியன் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டம், வன்முறையாக மாறியதை அடுத்து, அதில் மூன்று பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் வீடுகளைவிட்ட வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கரில் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று (திங்கள்கிழமை) ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர், பல போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை போராட்டத்தை அடுத்து, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நிலைமை பெருமளவில் கட்டுக்குள் இருப்பதாக காவல் துறை அறிவித்த நிலையில், திங்கள்கிழமை இந்தப் போராட்டம் வெடித்தது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது தொடர்பாக நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இருவர் மனு தாக்கல் செய்துள்ளனர். வழக்கறிஞர் சஷாங்க் சேகர் ஜா தாக்கல் செய்துள்ள ஒரு பொதுநல மனுவில், வன்முறைகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்க கோரியுள்ளார்.
மற்றொரு வழக்கறிஞர் விஷால் திவாரி தனது மனுவில், மாநிலத்தில் நடந்த வன்முறையை விசாரிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட நீதி விசாரணை ஆணையத்தை அமைக்கக் கோரியுள்ளார். மக்களின் உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஒரு மனுவில் கோரப்பட்டுள்ளது.
வக்பு திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்த மம்தா பானர்ஜி, மாநிலத்தின் அமைதிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நேற்று நடந்த வன்முறையை அடுத்து, அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று அவர் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, “மேற்கு வங்கம் பற்றி எரிகிறது. ஆனால், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியோ அமைதியாக இருக்கிறார்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.