புதுடெல்லி: வரிகளைத் தவிர்ப்பதற்காக வசதிபடைத்த இந்தியர்கள் தங்கள் வருமானத்தைக் குறைத்துக் காட்டுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேசிய கணக்குகளை ஆய்வு செய்யும் ஒரு ஆய்வறிக்கை, மக்களவை எம்.பி.க்கள் தெரிவித்துள்ள சொத்துக்களை மாதிரியாகக் கொண்டு நடத்திய ஆய்வில், வசதிபடைத்த இந்தியர்கள் தங்கள் வருமானத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகக் கண்டறிந்துள்ளது. இந்தியாவில் வருமான சமத்துவமின்மை அதிகமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை இது எழுப்புகிறது.
டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் இயக்குநர் ராம் சிங் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “ஒரு குடும்பம் எவ்வளவு செல்வந்தராக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அதன் செல்வத்துடன் ஒப்பிடும்போது அது தெரிவிக்கும் வருமானம் குறைவாக இருக்கிறது. சொத்துக்கள் மற்றும் நீண்ட கால மூலதன முதலீடுகள் போன்ற வசதியான நபர்களின் செல்வம், அவர்களின் வருமானத்தை விட ஒப்பீட்டளவில் அதிகமாக வளர்வது அசாதாரணமானது அல்ல.
வசதிபடைத்த குடும்பங்களைப் பொறுத்தவரை, அவர்களின் செல்வத்தோடு ஒப்பிடும்போது, தெரிவிக்கப்பட்ட வருமானம் மிகவும் குறைவாக உள்ளது. 2021 ஃபோர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு குடும்பத்திற்கு, அதன் வருமானம் அதன் மொத்த செல்வத்தில் 12ல் ஒரு பங்கு மட்டுமே என்று ஆய்வு மதிப்பிடுகிறது. வரிகளைத் தவிர்க்க வருமானம் மறைக்கப்படுவதை இது காட்டுகிறது.
வேளாண்மை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு இந்தியாவில் வரி கிடையாது என்பதால், வரிவிதிப்பிலிருந்து தப்பிக்க பண்ணை வருமானத்தை அதிகம் காட்டும் போக்கு உள்ளது. இதன் மூலம் விவசாய நிலங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியவில் வருமான சமத்துவமின்மை அதிகம் இருப்பதாக ஏற்கெனவே மதிப்பீடுகள் தெரிவித்துள்ள நிலையில், தற்போது அவை மேலும் அதிகரித்திருப்பதை இந்த கண்டுபிடிப்புகள் உணர்த்துகின்றன. கடந்த ஆண்டு உலக சமத்துவமின்மை ஆய்வகம் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில், இந்தியாவின் 40.1% சதவீத செல்வம் ஒரு சதவீதத்தினரிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பெரும் பணக்காரர்கள் மீது 2% செல்வ வரி விதிக்க வேண்டும். அப்போதுதான் சமத்துவமின்மையை குறைக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.