ஹைதராபாத்: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வெப்ப அலை மற்றும் வெயில் தாக்க பாதிப்புகளை மாநிலத்தின் குறிப்பிட்ட பேரிடராக அறிவித்து தெலங்கானா அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இந்தப் புதிய உத்தரவின்படி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் கிடைக்கும்.
இது குறித்து தெலங்கானா அரசு வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: மதிப்பீட்டு சிக்கல்கள் காரணமாக வெப்ப அலை பாதிப்புகள் ஒரு மறைமுகமான ஆபத்தாகவே அறியப்படுகிறது. அதன் பாதிப்புகளும் குறைவாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வெப்ப அலைகளின் தாக்கம் மற்றும் இறப்புகள் குறித்து மிகவும் குறைவான அளவிலேயே தகவல்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பிரிவினர்களான பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் பற்றிய தகவல்கள்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் வகையில் இனிமேல் வெப்ப அலை, வெயில் தாக்கப் பாதிப்புகளை மாநிலத்தின் குறிப்பிட்ட பேரிடர் என்று அறிவிக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. தெலங்கானாவில் உள்ள 5 மாவட்டங்களைத் தவிர, மீதமுள்ள 28 மாவட்டங்களில் குறைந்தது 15 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நிவாரணத் தொகை எதுவும் இல்லாததால், வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு ஆபத்பந்து திட்டத்தின் கீழ் ரூ.50,000 மட்டுமே நிவாரணம் வழங்கி வந்தது. மாநிலத்தில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் நியாயமான முறையில் ஹைபர்தேமியாவுக்கான பிற காரணங்கள் இல்லாமல், வெப்ப அலை தொடர்பான மரணங்களை உரிய அதிகாரிகளைக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய உத்தரவின்படி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் கிடைக்கும்.