புதுடெல்லி: ஹஜ் புனிதப் பயணம் தொடர்பாக சவுதி அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. அத்தகைய முயற்சிகளின் விளைவாக, 2014-ல் 136,020 ஆக இருந்த இந்தியாவுக்கான ஹஜ் புனித யாத்திரை ஒதுக்கீடு 2025-ல் 175,025 ஆக அதிகரித்துள்ளது.
சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் இந்திய ஹஜ் கமிட்டி மூலம் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டிற்கான பயண ஏற்பாடுகளை நிர்வகிக்கிறது. இது நடப்பு ஆண்டில் 122,518 ஆக இருந்தது. விமானப் பயணம், மினா முகாம்கள், தங்குமிடம் மற்றும் கூடுதல் சேவைகள் உட்பட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சவுதி அரேபிய அரசின் தேவைகளுக்கு ஏற்ப காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள ஒதுக்கீட்டு எண்ணிக்கை வழக்கம்போல் தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சவூதி வழிகாட்டுதல்களில் மாற்றங்கள் காரணமாக, 800-க்கும் மேற்பட்ட தனியார் சுற்றுலா ஆபரேட்டர்கள் ஒருங்கிணைந்த ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் என 26 சட்டபூர்வமான நிறுவனங்களாக ஒருங்கிணைக்கப்பட்டனர்.
சட்ட சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இந்த 26 குழுக்களுக்கு ஹஜ் ஒதுக்கீடு மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தால் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டது. எனினும் இந்தக் குழுக்கள் சவுதி அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உறுதிசெய்யத் தவறிவிட்டனர். மேலும் சவுதி விதிமுறைகளின் கீழ் தேவைப்படும் மினா முகாம்கள், தங்குமிடம் மற்றும் யாத்ரீகர்களின் போக்குவரத்து உள்ளிட்ட கட்டாய ஒப்பந்தங்களை இறுதி செய்ய இந்தக் குழுக்கள் தவறிவிட்டன.
இந்த விஷயத்தில் அமைச்சர்கள் மட்டத்தில் சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அரசின் தலையீட்டின் காரணமாக, மினாவில் தற்போது கிடைக்கும் இடத்தின் அடிப்படையில் 10,000 யாத்ரீகர்கள் தொடர்பான பணிகளை முடிக்க அனைத்து ஹஜ் பயண ஏற்பாட்டாளர்களுக்காக ஹஜ் இணையதளத்தை மீண்டும் திறக்க சவுதி ஹஜ் அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஸ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது தொடர்பாக சவுதி அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வலியுறுத்திய நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.