‘பஞ்சாபின் வெற்றி!’
வெறுமென 111 ரன்களை மட்டுமே அடித்து கொல்கத்தா அணியை 95 ரன்களுக்குள் வீழ்த்தி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது பஞ்சாப் அணி. இப்படி ஒரு ஆட்டத்தை ஐ.பி.எல்லில் பார்த்தே பல காலம் ஆகிவிட்டது.

முழுக்க முழுக்க பௌலர்களின் ஆட்டம் இது. பஞ்சாப் பௌலர்கள் அசாத்தியமாக வென்று கொடுத்திருக்கும் இந்தப் போட்டி கிரிக்கெட்டுக்கே நல்லது. ஏன் தெரியுமா?
‘பேட்டர்களின் ஆதிக்கம்!’
ஐ.பி.எல் மொத்தமாக பேட்டர்களின் ஆட்டமாகத்தான் இருக்கிறது. இம்பாக்ட் ப்ளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த 3 ஆண்டுகளில் ஐ.பி.எல் போட்டியின் போக்கை பேட்டர்கள் மட்டுமே தீர்மானித்து வருகின்றனர். கடந்த சீசனில் மட்டுமே 23 முறை 200 ரன்களுக்கும் மேல் அணிகள் ஸ்கோர் செய்திருந்தனர். கடந்த சீசன் அளவுக்கு இந்த சீசனில் அதிக ஸ்கோர்களை பார்க்க முடியவில்லை.

ஆனாலும் பேட்டர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பந்தில் எச்சில் தடவிக்கொள்ளலாம், இரண்டாம் இன்னிங்ஸில் பந்தை மாற்றிக் கொள்ளலாம் என ஒரு சில விஷயங்கள் மட்டுமே பௌலர்களுக்கு சாதகமாக இருக்கிறது. ஆனாலும் ஒரு போட்டியை முழுக்க முழுக்க தங்களின் கட்டுக்குள் வைக்கும் நிலையில் பௌலர்கள் இல்லை.
ரசிகர்கள், போட்டியின் ஒளிபரப்பாளர்கள், ஐ.பி.எல் நிர்வாகம் என எந்த தரப்புக்குமே பௌலர்கள் ஆதிக்கம் செலுத்தும் போட்டிகள் மீது அத்தனை ஈர்ப்பு இல்லை. 160-170 ஸ்கோர்கள் எடுக்கப்படும் போட்டிகளை எதோ உப்புமா படம் போலத்தான் ரசிகர்கள் பார்க்கின்றனர். பாராட்டுகளும் பரிசுகளுமே கூட பேட்டர்களுக்குதான் அதிகம் கிடைக்கிறது.
‘பௌலர்களுக்கு பாரபட்சம்!’
ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் பரிசளிப்பு விழாக்களே நடத்துகிறார்களே. அதில் பேட்டர்களுக்கு மட்டும் அதிக ஸ்ட்ரைக் ரேட், அதிக ஃபோர்கள், அதிக சிக்சர்கள் என நான்கைந்து விருதை வழங்குவார்கள். ஆனால், பேட்டர்களுக்கு அதிக டாட் டெலிவரிக்களை வீசியவர் என ஒரே ஒரு விருதைத்தான் வழங்குவார்கள். ஐ.பி.எல் முழுக்க முழுக்க பேட்டர்களுக்கு சாதகமானத்தான் இருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்.

இதனால் பௌலர்களுமே தங்களின் இயல்பான அக்ரஸனை இழந்து தற்காப்பு மனநிலையில்தான் பெரும்பாலும் வீசுகின்றனர். விக்கெட் தேவை இல்லை. எப்படியாவது பேட்டர்களை பவுண்டரி, சிக்சர்களை அடிக்க விடாமல் தடுத்தால் போதும் என்றே வீசுகின்றனர். ஒயிடு அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் டெலிவரிக்களை வீசி ஒயிடு வாங்கினாலும் பரவாயில்லை பேட்டர்களுடன் முட்டி மோதி அட்டாக்கிங்காக வீசி விக்கெட்டுக்காக முயலுவோம் என்ற மனநிலையில் பௌலர்கள் இல்லை.
அதனலால்தான் பேட்டர்களின் பாதத்தை துளைக்கும் யார்க்கர்களை பெரும்பாலான பௌலர்கள் வீசுவதே இல்லை. இது அபாயமான விஷயம். இது கிரிக்கெட்டில் பௌலர்களின் இடத்தை இன்னும் பலவீனமாக்கவே செய்யும்.
‘பஞ்சாப் பௌலர்களின் வெற்றி!’
இந்த மாதிரியான இடத்திலிருந்துதான் இந்தப் போட்டியின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். கொல்கத்தாவுக்கு 112 ரன்கள்தான் டார்கெட். கொல்கத்தா முதல் 8 ஓவர்களிலேயே 62 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்த 33 ரன்களுக்குள் கொல்கத்தாவின் அத்தனை விக்கெட்டுகளையும் பஞ்சாப் பௌலர்கள் எடுத்துவிட்டனர்.

யுஸ்வேந்திர சஹால்தான் கேம் சேஞ்சர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். கடைசியில் டெய்ல் எண்டர்களுடன் ரஸ்ல் நின்றார். கையில் 2 விக்கெட்டுகள்தான் இருக்கிறது. 34 ரன்கள் தேவை. அப்போதும் கூட சஹால் தற்காப்பாக வீசவில்லை. ரிஸ்க் எடுத்து ரஸலுக்கு சவால் அளிக்கும் வகையில் அவரை சிக்சர் ஆசைக்காட்டி வீழ்த்தும் வகையில்தான் வீசினார். அந்த ஓவரில் சஹால் அடிபட்டார். அது முக்கியமில்லை.
அவரின் மனநிலைதான் முக்கியம். தற்காப்பாக யோசிக்காமல் அட்டாக்கிங்காக விக்கெட்டுக்கு முயன்றார். இத்தனைக்கும் பந்து அவருக்கு நன்றாக திரும்பியது. முதல் 4 விக்கெட்டுகளையும் ஸ்லிப் வைத்து டைட்டாக பீல்ட் செட் செய்துதான் வீசினார். ரஸலுக்கும் அதையே செய்திருந்தால், ரஸல் சஹாலின் ஓவரில் ரிஸ்க் எடுக்காமல் நின்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், ரஸலின் விக்கெட்டுக்கு அது ஒரு தற்காப்பு அணுகுமுறைதான். ரஸலை வீழ்த்த வேண்டுமெனில் அவரின் பாணியில்தான் வீச வேண்டும். அதைத்தான் சஹால் முயன்று பார்த்தார்.

அதேமாதிரி, கடைசியில் அர்ஷ்தீப் சிங்கும் யான்சனும் ஓவர்களை வீசி கடைசி 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போதெல்லாம், ஒரு பரபர டெஸ்ட் மேட்ச்சின் கடைசி நாளின் கடைசி செஷனை பார்த்ததை போல இருந்தது.

பஞ்சாபின் வெற்றி, அவர்கள் மட்டுமே கொண்டாடுவதற்கான வெற்றியல்ல. இது ஒட்டுமொத்தமாக பௌலர்கள் எல்லோரும் கொண்டாட வேண்டிய வெற்றி. அத்தனை அணிகளின் பௌலர்களுக்கும் கிடைத்திருக்கும் நம்பிக்கை.

ஒரு போட்டியின் கதையாடலை பௌலர்களால் தீர்மானிக்க முடியும். ஒரு போட்டியை பௌலர்களால் மட்டுமெ வென்று கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கை அது.