ஆரவல்லி: குஜராத்தில் தொண்டர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தோற்கடிக்க முடியும் என்று தெரிவித்தார். மேலும் குஜராத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் சோர்வடைந்திருக்கிறார்கள் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக குஜராத்துக்கு சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு மாநிலத்தில் 30 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிப்பதற்கான காங்கிரஸின் உறுதியைத் தெரிவித்தார். வரும் 2027-ம் ஆண்டு மத்தியல் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் குஜராத்தில் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக மாவட்ட அளவிலான பிரிவுகளை வலிமையாக்கும் முன்னோடி திட்டத்தினை ஆரவல்லி மாவட்டத்தில் ராகுல் காந்தி இன்று தொடங்கி வைத்தார்.
பின்பு தொண்டர்களிடம் பேசிய அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் மிகவும் முக்கியமான மாநிலம். நாம் இங்கு கொஞ்சம் சோர்வடைந்திருப்பதை பார்க்க முடிகிறது, என்றாலும் மாநிலத்தில் நாம் அவர்களைத் தோற்கடிப்போம். அவர்களைத் தோற்கடிப்பது கடினமான வேலை ஒன்றும் இல்லை. நாம் நிச்சயம் அந்தப் பணியினைச் செய்து முடிப்போம். காங்கிரஸ் கட்சியால் மட்டுமை ஆர்எஸ்எஸ் – பாஜகவை தோற்றகடிக்க முடியும்.” என்று பேசினார்.