சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில் 60 பேரிடம் மனுக்களை பெற்ற காவல் ஆணையர் அருண், அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று காலை காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் காவல் ஆணையர் அருண் கலந்து கொண்டு, சட்டம்- ஒழுங்கும், குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிப்புரியும் 5 காவல் ஆய்வாளர்கள், 10 உதவி ஆய்வாளர்கள், 45 காவலர்கள் என 60 போலீஸாரிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
பெரும்பாலான மனுக்களில், பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
இந்த முகாமில் சென்னை காவல் கூடுதல் ஆணையர் விஜயேந்திர பிதரி, துணை ஆணையர்கள் ஹரிகரன் பிரசாத், சுப்புலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.