குற்றப்பத்திரிகை தாக்கல் அரசியல் உள்நோக்கம் கொண்டது: அமலாக்கத் துறைக்கு எதிராக காங். ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கும் நிலையில் மத்திய அரசு மற்றும் அமலாக்கத் துறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. நாடு முழுவதும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களின் தலைமையில் இந்தப்போராட்டம் நடந்து வருகிறது.

டெல்லியில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பினை மீற முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் டெல்லி போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனிடையே காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் மீதான இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமித் சாவ்தா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்கர்ஹி கூறுகையில், “இந்த கால வரிசையை கவனித்துப் பாருங்கள். குஜராத்தில் சமீபத்தில் நாங்கள் மாநாடு நடத்தினோம். ராகுல் காந்தி இப்போது குஜராத்தில் இருக்கிறார். இங்கே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. வரவிருக்கும் பிஹார் மற்றும் அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரவிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நிற்கின்றன. 400 என்ற இடத்தில் இருந்து 240 என்ற இடத்துக்கு அவர்கள் (பாஜக) வந்திருக்கிறார்கள்.

நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் வெளியேறி விட்டால் அரசு கவிழ்ந்துவிடும். பயந்தவர்கள் வீதிக்கு வருவதில்லை. வீட்டுக்குள்ளேயே ஒளிந்து கொள்கிறார்கள். பாஜக தோல்வி பயத்தில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கப்பார்க்கிறது. மக்கள் அதற்கு பதில் அளிப்பார்கள்” என்றார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அரசியல் பழிவாங்கள் என்ற காங்கிரஸின் குற்றச்சாட்டினை பாஜக மறுத்துள்ளது. பாஜக எம்.பி. ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் ஜாமீனில் வெளியே உள்ளனர். ஒட்டுமொத்த வழக்கையும் ரத்து செய்யக்கோரி அவர்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை நாடினர். ஆனால் நிவாரணம் கிடைக்கவில்லை.

அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டாம் என்பது மட்டுமே. நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அவர்களால் திருப்தியான பதிலைச் சொல்லமுடியவில்லை. சட்டம் அதன் இயல்பில் செயல்படுகிறது, ஆனால் அவர்கள் இதனை அரசியல் பழிவாங்கள் என்று கூறுகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.