சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? என்பது குறித்து அமித் ஷா முடிவெடுப்பார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நயினார் நாகேந்திரன் நேற்று தி.நகரில் உள்ள மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் வந்தார். பாஜக தொண்டர்கள் அவருக்கு பரிவட்டம் கட்டி, பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கமலாலயத்தில் கட்சி கொடியை ஏற்றினார். அதன் பிறகு, கட்சி நிர்வாகிகள், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இமயமலையில் ஆன்மிக பயணத்தை முடித்துவிட்டு, நேற்று கமலாலயம் வந்த அண்ணாமலை, நயினார் நாகேந்திரனை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மாநில தலைவர் இருக்கையில் அமர்ந்து அதிகாரப்பூர்வமாக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். இந்த ஆட்சியை அகற்றுவதற்கு மிகப்பெரிய எழுச்சி தெரிந்துக் கொண்டிருக்கிறது. அதற்கான விடிவு காலம் 2026-ல் வரும். அகில இந்திய காங்கிரஸ் தான் உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி. அந்த கட்சியுடன் தான் திமுக கூட்டணி வைத்திருக்கிறது. ஊழல் கட்சி செய்த குற்றத்தின் ஒரு அம்சமாக, நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை கண்டித்து, தமிழகம் முழுவதும் பாஜக இளைஞரணி சார்பில் போராட்டம் நடத்த இருக்கிறோம். அதேநேரத்தில் பெண்களுக்கு எதிராக பேசும் திமுகவினரை கண்டித்து, குறிப்பாக பொன்முடியை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. பாஜகவில் தான் கிளை செயலாளரும் மாநில தலைவராக முடியும். மாநில தலைவரும் தேசிய செயலாளராக முடியும். பாஜக குடும்ப கட்சி கிடையாது. அண்ணாமலை பாஜகவை கட்டுப்பாடுடன் வளர்த்தார்.
இப்போது, என்னை மாநில தலைவர் இருக்கையில் அமர வைத்து, அவரும் என்னுடனே இருக்கிறார். எனக்கு மூன்று ஆண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் கழித்து புதியவர் மாநில தலைவராகலாம். ஆனால், திமுகவில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அடுத்து அவரது மகன் வருவார். பாஜகவில் தான் சமூக நீதி இருக்கிறது.
கூட்டணியை பற்றி பேசியது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான். எனவே, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? என்பது குறித்து, அந்த நேரத்தில், அமித் ஷா முடிவெடுப்பார். அது பற்றி என்னால் கருத்து கூற முடியாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டியுள்ளது. எனவே, மக்களுக்கு எதிரான இந்த ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமித் ஷா அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். பாஜகவில் அண்ணாமலை புயலாக இருப்பார். நான் தென்றலாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில துணை தலைவர் கரு நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.