கொல்கத்தா: வக்பு (திருத்தம்) சட்டம் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், சட்டத்தை நிறைவேற்ற ஏன் இந்த அவசரம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்குவங்கத்தில் இன்று நடந்த இமாம்களுடனான சந்திப்பில் பேசிய மம்தா பானர்ஜி, “வக்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் ஏன் இவ்வளவு அவசரம் என்று நான் மத்திய அரசிடம் கேட்க விரும்புகிறேன். மேற்குவங்கத்தின் நிலைமை மத்திய அரசுக்குத் தெரியாதா? மேற்கு வங்கம் அதன் எல்லைகளை வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்கிறது.
நான் பிரதமர் மோடிக்கு எந்த ஒரு கொடூரமான சட்டத்தையும் கொண்டுவர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும் அவர், அவரது அரசின் உள்துறை அமைச்சரைக் கண்காணிக்க வேண்டும். நான் அனைத்து மதங்களைப் பற்றியும் பேசுகிறேன். நாம் காளி கோயிலை புதுப்பிக்கும் போது பாஜக எங்கே செல்லும்? நாம் துர்கா பூஜையைக் கொண்டாடும் போது அவர்கள் நம் மக்களை கொண்டாட விடுவதில்லை என்று சொல்வார்கள். ஒவ்வொரு வீட்டிலும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் போது அப்படி நடக்கவில்லை என்று சொல்வார்கள். அனைவரும் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் அதுவே நமது பண்பாடு.
முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறை தன்னிச்சையாக நடந்தது இல்லை. அவை திட்டமிடப்பட்டவை. பதற்றத்தைத் தூண்டுவதில் சில குழுக்கள் ஈடுபட்டன. பாஜக ஆதரவு ஊடகங்கள் மேற்கு வங்கத்தின் மீது அவதூறு பரப்ப போலியான வீடியோக்களை பரப்புகின்றன. அவர்கள் கர்நாடகா, உத்தரப் பிரதேசம், பிஹார் மற்றும் ராஜஸ்தானில் இருந்து எடுத்த வீடியோக்களை காட்டி அவதூறு செய்ய நினைக்கிறார்கள். அதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்தார்.
மேலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் குறித்து மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார். இது குறித்து அவர் “எத்தனை இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது பற்றி மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். மருந்து பொருள்கள், பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்துள்ளன. ஆனால் சில மோடி ஆதரவு ஊடகங்கள் மேற்குவங்கத்துக்கு எதிராகவே பேசி வருகின்றன. நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் தைரியமாக எனக்கு முன்னாள் வந்து நின்று சொல்லுங்கள். எனக்கு பின்னால் நின்று சொல்லாதீர்கள்.” என்றார்.