முல்லன்பூர்,
ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் தரப்பில் ப்ரப்சிம்ரன் சிங் 30 ரன் எடுத்தார்.
கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 112 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி, பஞ்சாப் வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.1 ஓவரில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 16 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் திரில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் தரப்பில் அபாரமாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது சாஹலுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து எதிரணியை 95 ரன்களில் சுருட்டி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் ஐ.பி.எல் வரலாற்றில் சி.எஸ்.கேவின் மாபெரும் சாதனை ஒன்றை முறியடித்துள்ளது.
அதாவது, ஐ.பி.எல் வரலாற்றில் மிக குறைந்த ரன்களை வைத்து எதிரணியை வீழ்த்திய அணியாக மாபெரும் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் நிகழ்த்தியது. இதற்கு முன்னர் சென்னை அணி (116/9) கடந்த 2009ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) அணியை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
ஐ.பி.எல்-லில் மிகக் குறைந்த ரன்களை வைத்து எதிரணியை வீழ்த்திய அணிகள் விவரம்:
பஞ்சாப் கிங்ஸ் – 111 ரன்: எதிரணி கொல்கத்தா (2025)
சென்னை சூப்பர் கிங்ஸ் – 116/9: எதிரணி பஞ்சாப் கிங்ஸ் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) (2009)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் – 118 ரன்: எதிரணி மும்பை (2018)
பஞ்சாப் கிங்ஸ் – 119/8: எதிரணி மும்பை இந்தியன்ஸ்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் – 119/8: எதிரணி புனே வாரியர்ஸ் இந்தியா
**மழையால் பாதிக்கப்பட்ட போட்டிகளை தவிர்த்து.