கோசாலையில் பசுக்கள் இறந்த விவகாரம்: கருணாகர் ரெட்டி மீது திருப்பதி எஸ்.பி.யிடம் புகார்

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான கோசாலையில் கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்துள்ளதாக கூறிய கருணாகர் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி எஸ்.பி.யிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது.

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசாலையில் கடந்த 3 மாதங்களில் உடல்நலம் குன்றியும், சரிவர தீவனம் வழங்கப்படாமலும் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் மற்றும் கன்றுகள் இறந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி புகார் கூறினார். இதற்கு புகைப்படங்களை அவர் ஆதாரமாக காட்டினார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இதற்கு திருப்பதி தேவஸ்தானம் கண்டனம் தெரிவித்தது. “மாதந்தோறும் கோசாலையில் சில பசுக்கள் மற்றும் கன்றுகள் உடல்நலம் குன்றி உயிரிழப்பது சகஜம். ஆயிரக்கணக்கான பசுக்கள் அங்கு பராமரிக்கப்படுகின்றன. 250-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 24 மணி நேரமும் பசுக்களை கண்காணித்து வருகின்றனர். முறையாக தீவனமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தேவஸ்தானத்தின் அலட்சிய போக்கால் ஒரு பசுகூட இறக்கவில்லை” என்று நிர்வாக அதிகாரி சியாமள ராவ் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் கருணாகர் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறங்காவலர் குழு உறுப்பினரும் ஆந்திர பாஜக செய்தித் தொடர்பாளருமான பானுபிரகாஷ் ரெட்டி நேற்று திருப்பதி எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பக்தர்களின் மனம் புண்படும் வகையில் கருணாகர் ரெட்டி பேசி வருகிறார். இவரது பதவிக் காலத்தில் நடந்த பல அட்டூழியங்களை நாங்கள் வெளிக்கொண்டு வந்தோம். எனவே எஸ்.வி. கோசாலை விஷயத்தில் அவர் பொய் பேசுகிறார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.