சென்னை: கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்காவிட்டால், அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, ‘‘சாதியை ஊக்குவிக்கும் சங்கங்களை, சங்கங்கள் பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்ய முடியுமா?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி பரத சக்ரவர்த்தி பிறப்பித்துள்ள உத்தரவு: சங்கங்களின் பெயரில் உள்ள சாதிப் பெயரை நீக்கும் வகையில் சங்க சட்ட திட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக சங்க நிர்வாகிகள் அரசை அணுக வேண்டும். சாதிகளின் பெயர்களில் சங்கங்களை பதிவு செய்ய கூடாது என அனைத்து பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை ஐ.ஜி. சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். சங்கங்களின் பெயரில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குமாறு அரசும் அறிவுறுத்த வேண்டும். இதுபோல சாதிப் பெயர்களை நீக்கி சட்ட திட்டங்களில் திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோத சங்கங்களாக அறிவித்து அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும். இந்த பணிகளை 3 மாதங்களுக்குள் தொடங்கி 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
இதேபோல சாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் பெயர்களிலும் உள்ள சாதிப் பெயர்களையும் 4 வார காலத்துக்குள் நீக்க வேண்டும். அப்படி நீக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி போன்றவற்றில் உள்ள சாதிப் பெயர்களையும் நீக்கி ‘அரசுப் பள்ளி’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களின் பெயர்களில் சாதி அடையாளம் இல்லாமல் நன்கொடையாளர்களி்ன் பெயர் இடம்பெறலாம்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ‘‘வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டனர் என்பதற்காக தங்களது பிள்ளைகளை பெற்றோரே ஆணவக் கொலை செய்வதாலும், பள்ளி மாணவர்கள் சாதி அடையாளமாக கையில் கயிறு கட்டிக்கொண்டு செல்வதாலும், அரிவாளுடன் வந்து சக மாணவர்களுடன் மோதிக்கொள்வதாலும் இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டியுள்ளது’’ என்று நீதிபதி தெரிவித்தார்.