தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் திவ்யா எஸ் அய்யர், கேரள மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உள்ளார். பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றிய அவர் இப்போது விழிஞ்ஞம் துறைமுக மேலான்மை இயக்குநராக பதவி வகித்துவருகிறார். திவ்யா எஸ் அய்யரின் கணவர் சபரிநாதன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். முன்னாள் எம்.எல்.ஏ-வான சபரிநாதனும், திவ்யா எஸ் அய்யரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். கேரளாவில் சி.பி.எம் ஆட்சி நடக்கும் நிலையில் காங்கிரஸ் நிர்வாகியின் மனைவியான திவ்யா எஸ் அய்யர் ஐ.ஏ.எஸ் எந்த சிக்கலும் இல்லாமல் பணிசெய்துவருகிறார். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த கேரள இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ராதாகிருஷ்ணன் எம்.பி-யாக தேர்வானார். அவரை வழியனுப்பும்போது கட்டி அணைத்து அன்பை வெளிப்படுதினார் திவ்யா எஸ் அய்யர். இது அப்போது நல்ல முன்னுதாரணமான கருத்துக்களுக்கான விவாதமாக உருவெடுத்தது. இந்த நிலையில் கண்ணூர் மாவட்ட சி.பி.எம் கட்சி செயலாளராக முன்னாள் ராஜ்யசபா எம். பி-யும், கேரள முதல்வர் பினராயி விஜயனின் பிரைவேட் செக்கரட்டரியாக இருந்தவருமான கே.கே.ராகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரி திவ்யா எஸ் அய்யர் அவரை வாழ்த்தி சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

முதல்வர் பினராயி விஜயனுடன் எஸ்.எஸ்.ராகேஷ் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த திவ்யா எஸ்.அய்யர், “கர்ணன் கூட பொறாமைப்படும் அளவிற்கு உள்ளது இந்த கே.கே.ஆரின் கவசம்! கடந்த மூன்று ஆண்டுகளாக அவரது அபீசியல் வாழ்க்கையை பார்த்ததில் அவரின் பல குணங்களை புரிந்துகொள்ள முடிந்தது. விசுவாசத்துக்கு ஒரு பாடபுத்தகம். கடின உழைப்புக்கு வழிகாட்டி” என குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்கள் பின்னூட்டமிடப்பட்டன. இது அரசியல் ரீதியாகவும் விவாதம் ஆனதைத் தொடர்ந்து திவ்யா எஸ் அய்யரின் கணவர் சபரிநாதனும் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ-வும், திவ்யா எஸ் அய்யரின் கணவருமான சபரிநாதன் கூறுகையில், “அரசுக்காக இரவு பகல் பாராது பாடுபடுபவர்தான் திவ்யா. அரசியல் ரீதியாக பதவி பெற்ற நபரை நல்ல எண்ணத்துடன் புகழ்ந்தாலும், அதில் தவறு உள்ளது. முதல்வருக்கும், அரசு திட்டங்களுக்கும் உறுதுணையாக நிற்கவேண்டியது அதிகாரியின் தர்மம் ஆகும். அது சம்பந்தமாக பாசிட்டிவ்-வான கருத்துகளை பகிர்வதில் தவறு இல்லை. அரசையும், அரசின் செயல்பாடுகளையும் புகழ்ந்து பேசுவதிலும் தவறு இல்லை. ஆனால், அரசியலில் பதவி வழங்கப்பட்டவரை வாழ்த்துவது அதேபோன்றது அல்லது. அதனால்தான் திவ்யா-வின் கருத்து அரசியல் ரீதியாக மாறியுள்ளது. வேறு ஒரு அதிகாரியாக இருந்தால் சில நேரம் அதை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பார்கள். எதிர்காலத்தில் மற்றொரு அதிகாரி என்னை புகழ்ந்து பேசினாலும் அது சரியான செயல்பாடு அல்ல என்பதுதான் எனது கருத்து” என்றார்.