நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை, 2023-ம் ஆண்டு பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த போது சாதிய பாகுபாடு காரணமாக சக மாணவர்களால் வீடு புகுந்து கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்டார். அதில் சின்னதுரைக்கு மட்டுமல்லாமல், அதைத் தடுக்க முயன்ற அவரது சகோதரிக்கும் படுகாயம் ஏற்பட்டது. அதனால் அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுமார் ஆறு மாதகால சிறப்பு சிகிச்சைகளுக்குப் பிறகு உடல் நலம் தேறி தற்போது பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அவரும் அவரது தாயாரும் தொடர்ந்து நாங்குநேரியில் தங்கியிருந்தால் பாதுகாப்பு இருக்காது என்பதால் அவர்களுக்கு பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டதுடன், சின்னதுரைக்கு பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் சேர அதிகாரிகள் உதவினார்கள். அத்துடன் அவரது தாயாருக்கும் ரெட்டியார்பட்டி பள்ளியில் சத்துணவு சமையலராக பணியிட மாற்றம் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரும் அவரது சகோதரியும் பாளையங்கோட்டை பகுதியில் படித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று இரவு அவரை சிலர் நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள வசந்தம் நகர் பகுதிக்ககு அழைத்துள்ளனர். அங்குள்ள இருள் சூழ்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது. அதில் படுகாயம் அடைந்த அவர், நெல்லை அரசு மருத்துவக்.கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரைத் தாக்கிய கும்பல் யார், எதற்காக அவரைத் தாக்கினார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “கல்லூரி மாணவன் சின்னத்துரைக்கு ஆன்லைன் செயலி மூலமாக சில நண்பர்களின் பழக்கம் கிடைத்ததாகத் தெரிகிறது. அவர்களுடன் ஆன்லைன் மூலமாக தொடர்ந்து பேசி வந்த அவர், அவர்களின் அழைப்பின் பேரில் வசந்தம் நகர் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஆன்லைன் மூலமாக பழகி ஐந்து பேரும் சின்னதுரையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை தாக்குயதுடன் அவரது செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர். உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்ட அவர் அங்கிருந்து தப்பி வந்து, சாலையில் சென்றவர்கள் உதவியுடன் அவரது தாய்க்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவன் சின்னதுரை இரவு நேரத்தில் வசந்தம் நகர் பகுதிக்கு வரக் காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம். ஆனால் அவன் இது தொடர்பாக எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து வருகிறார். சின்னதுரையை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாக்குதல் நடத்திய கும்பல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது பற்றியும் விசாரிக்கிறோம்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சின்னதுரை மீதான தாக்குதல் தொடர்பாக நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனை நேரில் பார்வையிட்டு சிகிச்சை முறைகள் குறித்தும் அதிகாரிகள் கேட்டறிந்தனர். இந்த விவகாரம் நெல்லை மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.