புதுச்சேரி: பாஜக ஆளும் மாநிலங்களில் எந்த ஊழல் குற்றச்சாட்டு இருந்தாலும் மோடி அரசு கண்ணை மூடிக்கொள்கிறது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கும் நிலையில் மத்திய அரசு மற்றும் அமலாக்கத் துறைக்கு எதிராகவும், கடும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற மக்களின் அன்றாட வாழக்கையின் அல்லல்களை தீர்க்கத் தவறிய மோடி அரசு மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியை கண்டித்தும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சுதேசி மில் அருகே புதன்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: காந்தி, நேரு குடும்பத்தை பழிவாங்கும் வேலையை நரேந்திர மோடி, அமித்ஷா, ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் செய்து வருகிறார்கள்.
அதற்கு காரணம் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். உயிரோட்டமாக வைத்திருக்கிறார்கள். அதை முறியடிக்க வேண்டும். ஆணி வேரை பிடுங்கினால் மரம் இறந்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆணி வேரை பிடுங்க பார்க்கிறார்கள். இதெல்லாம் எடுபடாது.
ராகுல் காந்தி மீது போடும் வழக்கானது திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு செய்யப்படுகின்றது. பாஜக ஆட்சியில் ஊழல், பணப்பறிமாற்றம், அந்நிய செலவானி முதலீடு போன்றவைகள் நடக்கவில்லையா? பாஜக முதல்வர்கள் ஊழல் செய்யவில்லையா? அசாம் மாநில முதல்வர் மீது ஊழல் வழக்கு, எடியூரப்பா முதல்வராக இருக்கும்போது அவர் மீது ஊழல் வழக்கு போடப்பட்டது.
மத்திய அமைச்சர்கள் மீதும் வழக்கு உள்ளது. அங்கெல்லாம் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போகின்றதா? பாஜக ஆளும் மாநிலங்களில் எந்த ஊழல் குற்றச்சாட்டு இருந்தாலும் மோடி அரசு கண்ணை மூடிக்கொள்கிறது.
ஆனால், எதிர்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களை திட்டமிட்டு துன்புறுத்துவது, பொய் வழக்கு போடுவது, சிறைக்கு அனுப்புவது போன்ற வேலையை செய்கின்றது. தமிழகம் உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆளும் மாநிலங்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர்.
ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் என்ன ஊழல் செய்தாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. சோனியா காந்தி, ராகுல் காந்தி இந்த பொய் வழக்கில் இருந்து கண்டிப்பாக வெளியே வருவார்கள். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும்.
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக ஆட்சியில் தினந்தோறும் ஊழல். முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஊழல் செய்கின்றனர். இன்னும் 6 மாதங்கள் தான் இருக்கின்றது. இதில் ஒட்டுமொத்தமாக கொள்ளை அடித்துவிட்டு அரசு கஜானாவை காலி செய்துவிட்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடி, ஏன்? முதல்வர் ரங்கசாமி, நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் மீது வழக்கு போடவில்லை. இந்த பாரபட்சம் ஏன்? இவ்வாறு அவர் பேசினார்.