Doctor Vikatan: என்னுடைய தோழியின் அம்மாவுக்கு வாய்ப் புற்றுநோய் வந்து பல வருடங்களாக சிகிச்சையில் இருக்கிறார். மிக இளம் வயதிலேயே அவருக்கு வாய்ப் புற்றுநோய் பாதித்திருக்கிறது. ஞானப்பல் குத்திக்குத்தி புண் ஆனதுதான் காரணம் என்றாராம் டாக்டர். எல்லோருக்குமே ஞானப்பல் முளைப்பதும் அது உறுத்துவதும் குத்திப் புண்ணாவதும் இயல்பாக நடப்பதுதானே… அது புற்றுநோய் பாதிக்கும் அளவுக்குப் பெரிய பிரச்னையாக மாறுமா… ஞானப்பல்லை அகற்றியே ஆக வேண்டுமா?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி

ஞானப்பல்லை ஆங்கிலத்தில் ‘wisdom tooth’ என்று சொல்வார்கள். இந்தப் பல்லானது பெரும்பாலும் பலருக்கும் 17 முதல் 25 வயதுக்குள்தான் வரும்.
தாடைப்பகுதியில் ஞானப்பல் முளைப்பதற்குப் போதுமான இடம் இருந்தாலும், அது முளைத்துவரும்போது சம்பந்தப்பட்ட நபருக்கு எந்தப் பிரச்னையும் கொடுக்காத பட்சத்திலும் ஞானப்பல்லை அகற்ற வேண்டிய தேவை ஏற்படாது. ஆனால், அது பாதிதான் முளைத்திருக்கிறது என்றாலோ, முளைக்கும்போதே பொசிஷன் மாறியிருக்கிறது என்றாலோ, அதைச் சுற்றியுள்ள ஈறு பகுதியில் கிருமிகள் சேர்ந்து இன்ஃபெக்ஷன் ஏற்படும்.

அதை ‘பெரிகொரோனைட்டிஸ் ‘ (Pericoronitis ) என்று சொல்வோம். இந்நிலையில் அந்தப் பல்லைச் சுற்றி வீக்கம் இருக்கும். பேசுவதற்கும் சாப்பிடுவதற்கும் சிரமப்படுவார்கள். வாயின் வெளிப்பகுதியிலும் வீக்கம், காய்ச்சல் போன்றவை இருக்கலாம்.
பாதி முளைத்த நிலையிலோ அல்லது முழுவதும் முளைத்தும் சரியாகப் பராமரிக்காததால் சொத்தையானதாலோ, அதுவும் ஆழமாக இறங்கி, பல்லின் வேர்வரை இன்ஃபெக் ஷனை ஏற்படுத்தலாம். அதுபோன்ற நிலையில் ஞானப்பல்லை நீங்கள் அகற்ற வேண்டியிருக்கும்.
ஞானப்பல்லின் அலைன்மென்ட் சரியின்றி, பக்கத்துப் பல்லை இடித்துக்கொண்டிருந்தாலோ, பக்கத்துப் பல்லில் தேய்மானத்தை ஏற்படுத்தினாலோ, ஞானப்பல்லின் வேரைச் சுற்றி கட்டி ஏற்பட்டாலோகூட அந்தப் பல்லை அகற்ற வேண்டியிருக்கும். ஞானப்பல்லின் பொசிஷன் மாறியிருப்பதால் தசைக்குள் சிலர் அதைக் கடித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கும் அந்தப் பல்லை அகற்ற வேண்டியிருக்கும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவத்தில், அந்த நபருக்கு பல் சொத்தையாக இருந்திருக்கலாம். அந்தப் பல்லின் முனைகள் மிகவும் ஷார்ப்பாக இருந்திருக்கலாம். அது தசைப்பகுதியில் குத்தி, புண்ணாகி, நாளடைவில் புற்றுநோயாக மாறியிருக்கலாம்.
முன்கூட்டியே எச்சரிக்கையாகி, பயாப்சி செய்து பார்த்திருந்தால், அது புற்றுநோயா அல்லது புற்றுநோயல்லாத நிலையா என்று கண்டுபிடிக்கலாம். எனவே, ஞானப்பல் எத்தகைய பிரச்னைகளை, அசௌகர்யங்களைத் தருகிறது என்பதைப் பொறுத்தே அதை அகற்ற வேண்டுமா, வேண்டாமா என்பது முடிவு செய்யப்படும்.
ஞானப்பல் அடிக்கடி குத்தி, புண்களை ஏற்படுத்துகிறது, வீக்கம் வருகிறது என்றால் அது குறித்து மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
