Indian Premier League: கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் அதன் உச்சக்கட்டத்தை தற்போது எட்டியிருக்கிறது என சொல்லலாம். அனைத்து அணிகளும் அதன் முதல் பாதி லீக் போட்டிகளை நிறைவு செய்ய இருக்கின்றன.
IPL 2025: விறுவிறுப்பான கட்டத்தில் ஐபிஎல் தொடர்
இரண்டாம் பாதி லீக் சுற்றுப் போட்டிகளும் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதிப்பெறப்போவது யார் என்ற பெரிய கேள்வியும் 10 அணிகளை சுற்றி தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. நேற்றைய 31வது லீக் போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தாவை 95 சுருட்டி வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
அதாவது, 111 ரன்கள் அடித்திருந்த பஞ்சாப் அணி, கொல்கத்தாவை 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததால், ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக தடுத்த பெருமையை பஞ்சாப் கிங்ஸ் அணி பெற்றுள்ளது. இதற்கு முன் 2009ஆம் ஆண்டு டர்பனில் 116 ரன்களை எடுத்திருந்த சிஎஸ்கே, பஞ்சாப் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோரை டிஃபண்ட் செய்ததாக இருந்தது.
IPL 2025: பிசிசிஐ கொடுத்த வார்னிங்
இப்படி ஒவ்வொரு போட்டியும் பயங்கர விறுவிறுப்புடன் நடைபெற்று வர பிசிசிஐ, 10 அணிகளுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் அலர்ட் ஒன்றை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட தனிநபர்களை (வீரர்கள், அணி உரிமையாளர்கள்) கவர்ந்திழுக்கும் முயற்சிகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், இதைக் கருத்தில் கொண்டு, சூதாட்ட நடவடிக்கைகளில் சந்தேகப்படும் ஒரு தொழிலதிபர் அதுகுறித்த தொடர்பு கொள்ள தீவிரமாக முயற்சி செய்யலாம் என்று 10 அணிகளின் உரிமையாளர்கள், வீரர்கள், பயிற்சியாளர்களை எச்சரித்துள்ளது. குறிப்பாக வர்ணனையாளர்களையும் பிசிசிஐ எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2025: யார் அந்த நபர்?
பொதுவெளியில் தொழிலதிபர் என அறியப்படும் அந்த ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும், அந்த நபருக்கு சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், இதுபோன்ற செயல்களில் இதற்கு முன்பு ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது என்றும் ஊழல் தடுப்பு பாதுகாப்பு பிரிவு (ACSU) கருதுகிறது. எந்தவொரு முறைகேடுகளும் நிகழாமல் தடுக்க, ஊழல் தடுப்பு பாதுகாப்பு பிரிவு அனைத்து அணிகளையும் முன்கூட்டியே எச்சரித்துள்ளது.
குறிப்பிடப்பட்ட நபரிடம் இருந்தோ அல்லது அவர்கள் தரப்பில் இருந்தோ வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி உரிமையாளர்களிடம் ஏதேனும் அணுகுமுறைகள் நடந்தால், உடனே அவர்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விலை உயர்ந்த நகைகள், பரிசுகளைக் கொண்டு தனிநபர்களை ஈர்க்க அவர்கள் முயற்சிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களை ரசிகராக காட்டிக்கொண்டு, அதன்மூலம் அணியையும், வீரர்களையும் நெருங்க முயற்சிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
IPL 2025: அந்த நபரின் தொடர் முயற்சிகள்
அது மட்டுமின்றி, அந்த குறிப்பிட்ட தொழிலதிபர் அணியினர் தங்கயிருக்கும் ஹோட்டல்களுக்கு வருகிறாராம். விளையாடும் போட்டியையும் காண வருகிறாராம். வீரர்கள், அணியின் பயிற்சியாளர்களுடன் நட்பு கொள்ள முயற்சிப்பதும், அவர்களை தனியே பார்டிக்கு அழைப்பதும் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வீரர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கும் ‘அவர்’ பரிசுகளை வழங்கிய சம்பவங்களும் உள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்கள் மூலம் வீரர்களின் உறவினர்கள், வெளிநாட்டில் வசிக்கும் பயிற்சியாளர்களைத் தொடர்பு கொள்ள இந்த நபர் முயற்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.