RR vs DC Highlights : ஐபிஎல் 2025ன் முதல் சூப்பர் ஓவர்..! டெல்லி அபார வெற்றி..!!

RR vs DC 2025 super over highlights : ஐபிஎல் 2025ன் முதல் பரபரப்பான சூப்பர் ஓவர் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இப்போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மிட்செல் ஸ்டார்க்கின் அபார பந்துவீச்சு மூலம் கம்பேக் கொடுத்து, சூப்பர் ஓவர் சென்று வெற்றியை பெற்றது. உண்மையில் இப்போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேட்சுகளை தவறவிட்டது, சூப்பர் ஓவரில் ஜெய்ஸ்வாலை ஓப்பனிங் இறக்காமல்  ஹெட்மெயரை இறக்கி, அவரும் ஒழுங்காக ஆடாமல், இரண்டு பிளேயர்களின் ரன்அவுட்டுக்கு காரணமாக இருந்ததால் இப்போட்டியில் அந்த அணி தோற்க வேண்டியிருந்தது. 

டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் செய்வதாக அறிவித்தார். முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே இந்த மைதானத்தில் அதிக  போட்டிகளை வெற்றி பெற்றிருப்பதால் சாம்சன் பேட்டிங் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆச்சரியமாக பவுலிங் எடுத்தார். அதற்கேற்ப ராஜஸ்தான் பவுலர்களும் ஓரளவுக்கு சிறப்பாகவே பந்துவீசினர். ஏனென்றால் டெல்லி மைதானம் மிகச்சிறிய மைதானங்களில் ஒன்று. பேட்டிங் ஆட ஏற்ற மைதானம். அதனால் இந்த பிட்சில் முதலில் விளையாடும் அணிகள் சர்வ சாதாரணமாக 200 ரன்களை குவிக்கலாம். ஆனால், ராஜஸ்தான் அணியின் நல்ல பவுலிங் காரணமாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 188 ரன்கள் எடுத்தது. அக்சர் படேல் 14 பந்துகளில் 34 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 பந்துகளில் 34 ரன்களும் எடுத்தால், இந்த ஸ்கோர் டெல்லி அணியால் எடுக்க முடிந்தது. 

இவர்கள் இருவரும் கடைசிநேர அதிரடி மட்டும் இல்லாமலிருந்திருந்தால் இன்னும் குறைவான ஸ்கோரையே டெல்லி அணி எடுத்திருக்கும். அதேபோல் சேஸிங்கில் எதிர்பார்த்தைப் போலவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமான பேட்டிங்கை  வெளிப்படுத்தியது. சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஷ்வால் இருவரும் ஆரம்பத்திலேயே அதிரடியான ஆட்டத்தை  வெளிப்படுத்தினர். ராஜஸ்தான் அணி பந்துவீசும்போது அடிக்கடி கேட்சுகளை விட்ட நிலையில், டெல்லி அணியும் பவுலிங்கின்போது கேட்சுகளை கோட்டைவிட்டது. சாம்சன் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தபோது அஷூதோஷ் ஷர்மா ஒரு கேட்சை விட்டார். இறுதிக் கட்டத்தில் மேட்ச் பரபரப்பாக சென்று கொண்டிருந்தபோது நிதீஷ் ராணாவின் கேட்சை டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சிக்சர் லைனில் விட்டார். அந்த பந்து சிக்சருக்கு சென்றது. அதற்கு அடுத்த பந்தையும் பவுண்டரிக்கு விளாசிய நிதீஷ் ராணா, அடுத்தடுத்து இன்னும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமும் அடித்தார். 

இருப்பினும் இறுதிக்கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி தோல்வியின் விளிம்பில் இருந்த டெல்லி அணியை வெற்றிப்பாதையின் பக்கம் திருப்பினார். இதனால் போட்டி சமனில் முடிந்து சூப்பர் ஓவருக்கு சென்றது. அதில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. ஜெய்ஷ்வாலை ஓப்பனிங் இறக்கியிருக்கலாம். ஆனால் ஹெட்மயரை அந்த அணி இறக்கியத்தால் அவரும் ஒழுங்காக ஆடாமல் ரியான் பராக், ஜெய்ஷ்வால் இருவரும் ரன்அவுட்டாக காரணமாக இருந்தார்.இதுவே அந்த அணி தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. சூப்பர் ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 4 பந்துகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அத்துடன் ஐபிஎல் புள்ளிப் பட்டியலிலும் முதல் இடத்தை பிடித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.