வாஷிங்டன்: அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக போரில் குதித்துள்ளன. இந்நிலையில் சீனா விற்பனையாளர்கள், தங்கள் வர்த்தக வியூகத்தை மாற்றி விளம்பரம் செய்யத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவில் விற்பனையாகும் பிர்கின் மற்றும் லூயிஸ் உய்ட்டன் போன்ற பிரபல பிராண்டுகளின் கைப்பைகள், ஆடைகள், அழகுசாதன பொருட்களை லோகோ இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மலிவு விலையில் விற்பனை செய்வதாக சீன நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
பிர்கின் பிராண்ட் கைப்பைகளை விநியோகிக்கும் ஒருவர் கூறுகையில், ‘‘34,000 அமெரிக்க டாலருக்கு விற்கப்படும் கைப்பையின் தயாரிப்பு செலவு 1,400 டாலர்தான். பிரபல பிராண்டுகளின் பொருட்களை தயாரிக்கும் எங்களுக்கு குறைந்த லாபம்தான் கிடைக்கிறது.
லாபத்தில் பெரும்பங்கை லோகோ மற்றும் பிராண்ட் நிறுவனங்கள் பெறுகின்றன. 90 சதவீதத்துக்கு அதிகமான விலை லோகோ மற்றும் பிராண்ட்டுக்காக நீங்கள் செலவு செய்கிறீர்கள். அதைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையென்றால், அதே அளவு தரமான பொருட்களை நீங்கள் எங்களிடம் மலிவு விலையில் பெறலாம்’’ என டிக்டாக் வீடியோவில் சீன வியாபாரி ஒருவர் கூறுகிறார்.
100 டாலருக்கு விற்பனையாகும் லூலுலெமன் தயாரிப்புகளை வெறும் 5 டாலருக்கு வாங்க முடியும் என மற்றொரு சீன வியாபாரி கூறுகிறார். வரியுடன் பொருட்களை அனுப்புவதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாகவும், சீன விற்பனையாளர்கள் கூறுகின்றனர். வரி உயர்வு காரணமாக அமெரிக்க பொருட்கள் அனைத்தையும், சீனாவில் போலியாக தயார் செய்வதற்கு சீன அரசும் சட்டபூர்வ அங்கீகாரம் அளித்துவிட்டது. பிரபல பிராண்டுகளின் பொருட்கள் சீனாவில் மலிவு விலையில் உற்பத்தி செய்யப்படும் வீடியோக்கள், பார்வையாளர்களை சீனாவில் பொருட்களை வாங்குவதை தூண்டுகின்றன.