''அமைச்சர் சேகர்பாபு வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்'' – அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்ட அலங்காரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் பெயரும், தமிழக அரசின் முத்திரையும் இடம் பெற்றிருப்பதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள்.

கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நைனார் நாகேந்திரனின் பதிவு: இதே கருத்தை வலியுறுத்தி பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மறைந்த கருணாநிதியின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோயிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் திமுக அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது.

“பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி” என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா?

சமாதியின் மீது கோயில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோயில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா?

அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் சேகர்பாபு இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

மேலும், அந்த பிரச்சினைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.