உத்தபுரம் கோயிலில் இரு தரப்பினரும் சம உரிமையுடன் வழிபாடு நடத்த ஐகோர்ட் யோசனை

மதுரை: உத்தபுரம் கோயிலில் இரு தரப்பினரும் சம உரிமையுடன் வழிபாடு நடத்தலாம். இது தொடர்பாக இரு தரப்பும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை உத்தப்புரத்தைச் சேர்ந்த பாண்டி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில், “மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பங்குனி மற்றும் புரட்டாசி மாதத்தில் திருவிழா நடைபெறும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கோயில் மற்றும் கோவில் திருவிழாவை நிர்வகித்து வருகின்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டில் கோயிலில் வழிபடுவது தொடர்பாக இரு சமூகத்தினருக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையால் கோயில் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இதனால் கடந்த 9 ஆண்டுகளாக கோயில் பூட்டப்பட்டது. இதனால் உத்தபுரம் முத்தாலம்மன், மாரியம்மன் கோயில்களை திறக்கவும், பூஜைகள் செய்யவும் உத்தரவிட வேண்டும்,” என கூறியிருந்தார்.

இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து, கோயிலை திறந்து தினசரி வழிபாடு நடத்த அனுமதி வழங்கினார். இதற்கு எதிராக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் தனி நீதிபதி உத்தரவின் பேரில் கோயில் திருவிழா நடத்த அனுமதி வழங்காததால் மதுரை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான அரசின் மேல்முறையீடு மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வில் இன்று (ஏப்.17) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “உத்தபுரம் கோயிலில் திருவிழா நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே திருவிழாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “கோயிலில் இருக்கும் மரத்தை பக்தர்கள் சுற்றிவரலாம். மரத்தை தொடக்கூடாது, ஆணி அடிக்கக் கூடாது, சந்தனம் பூசக்கூடாது என அறநிலையத் துறை சார்பில் தகவல் பலகை வைக்க வேண்டும். கோயிலுக்கு பக்தர்கள் செல்வது, பக்தர்கள் மரத்தை வணங்குவதை யாரும் தடுக்க முடியாது. மரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான செயல்களை யாரும் செய்யக் கூடாது. இரு தரப்பினரும் சம உரிமையுடன் கோயிலில் வழிபாடு நடத்தலாம். இது தொடர்பாக இரு தரப்பும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேல்முறையீட்டு மனு தீர்ப்புக்காக ஏப்.21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.