புதுடெல்லி,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் போரல் 49 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியும் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 5 பந்தில் இரு விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன் எடுத்தது. பின்னர் 12 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 4 பந்தில் 13 ரன் சேர்த்து வெற்றி பெற்றது.
கடைசி ஓவர் (20-வது ஓவர்) மற்றும் சூப்பர் ஓவரை அற்புதமாக வீசி டெல்லி அணியின் இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசியது குறித்து மிட்செல் ஸ்டார்க் பேசுகையில், “நான் என்னுடைய திறனை மட்டுமே நம்பி அந்த கடைசி ஓவரை வீசினேன். அதேபோன்று கடைசி ஓவரை வீச ஓடிவரும்போது எனக்கு ஒரு தெளிவான திட்டம் இருந்தது. அதாவது எதிரில் நிற்கும் பேட்ஸ்மேனுக்கு பவுண்டரியை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நினைத்து யார்க்கர் பந்துகளாக வீசினேன்.
அதிர்ஷ்டமும் என் வசம் இருந்ததால் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம். கடந்த பல ஆண்டுகளாகவே நான் என்ன செய்து வருகிறேன் என்பது இதுபோன்ற போட்டிகளின் மூலம் தெரிகிறது. இந்த கடைசி ஓவரை மிகச்சிறப்பாக வீசியதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.