‘கருணாநிதி சமாதியில் விளம்பரம் தேட கோயில் கோபுரம்தான் கிடைத்ததா?’ – சேகர்பாபுவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி

மதுரை: “தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் இந்து மதத்தை இழிவுபடுத்துவதை வழக்கமாகவும், ஒரு தொழிலாகவும் வைத்துள்ளனர். இந்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யாவிட்டால் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் திமுகவுக்கு மிப் பெரிய பாடம் புகட்டுவார்கள். கருணாநிதி சமாதியில் விளம்பரம் தேட கோயில் கோபுரம் தான் கிடைத்ததா?” என இந்து மக்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான மனநிலை கொண்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவரது சமாதியை இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையை ஒட்டி அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு ஆண்டாள் கோயில் கோபுரத்தை வரைந்து அலங்கரித்துள்ளார். சமாதியில் கோயில் கோபுரம் படம் வரையப்பட்டது திருக்கோயில்களின் கோபுரங்களின் புனிதத்தை கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

சமாதியில் கோயில் கோபுரம் வரைந்ததற்காக அமைச்சர் சேகர்பாபுவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது. திமுக தலைவரின் குடும்பத்துக்கு விசுவாசத்தை காட்டவும், அமைச்சர் பதவியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் கருணாநிதி சமாதியில் சேகர்பாபு விளம்பரம் தேடுவதற்கு கோயில் கோபுரம்தான் கிடைத்ததா?அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது கருணாநிதி சமாதியில் கோயில் கோபுரத்தை அமைச்சர் சேகர்பாபு வரைந்துள்ளார்.

இதேபோல் சிறுபான்மையினர் நலன் மற்றும் மது ஆயத்தீர்வு தொடர்பான மானியக்கோரிக்கைகளின் போது கருணாநிதி சமாதியில் சர்ச் அல்லது மசூதி படம் அல்லது மதுபானம் படங்களை வரைந்து அந்தந்த துறைகளின் அமைச்சர்களால் வழிபாடு நடத்த முடியுமா? அப்படி செய்தால் அந்த மாதத்தினர் சும்மாவிட்டிருப்பார்களா? இந்து சமயத்தை எப்படி இழிவுபடுத்தி பேசினாலும், இதுபோல் கோயில் கோபுர படங்களை வைத்தாலும் இந்துக்கள் யாரும் எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள், அமைதியாக வேடிக்கை பார்ப்பார்கள் என்ற தைரியத்தில் அமைச்சர் சேகர்பாபு இப்படி நடந்துள்ளார்.

திமுக ஆட்சி வந்த நாளிலிருந்தே இந்து, சைவ, வைணவ சமயங்களின் மீதும், இந்து மத, சனாதன நம்பிக்கைகள் மீதும், இந்து கோயில்கள் மீதும், இந்து பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும் துணை முதல்வர் உதயநிதியில் தொடங்கி அமைச்சர்கள், திமுக பேச்சாளர்கள் வரை நடந்து வருகின்றனர். அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு ஆகியோரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அமைச்சர்கள் தினமும் இந்து மதத்தை இழிவுபடுத்துவதை வழக்கமாகவும், தொழிலாகவும் வைத்துள்ளனர். இந்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யாவிட்டால் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் திமுகவுக்கு மிப்பெரிய பாடம் புகட்டுவார்கள்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.