புதுடெல்லி: காஷ்மீர் உடனான பாகிஸ்தானின் உறவு என்பது, அந்த நாடு சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பிரதேசத்தை விட்டுக் கொடுப்பது மட்டுமே என்று இந்தியா தெரிவித்துள்ளது.
வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் இன்று புதுடெல்லியில் வாராந்திர செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விவரம்: காஷ்மீர் பாகிஸ்தானின் “கழுத்து நரம்பு” என்று அந்நட்டு ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிர் கூறி இருக்கிறார். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேசம். பாகிஸ்தானுடனான அதன் ஒரே உறவு, அந்த நாடு சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பிரதேசத்தை விட்டுக்கொடுத்தல் மட்டுமே.
மும்பை தாக்குதல் குற்றவாளிகளை பாகிஸ்தான் பாதுகாக்கிறது. பாகிஸ்தான் எவ்வளவுதான் கடினமாக முயற்சி செய்தாலும், அது பயங்கரவாதத்தின் மையம் என்ற பெயர் மாறாது. தஹாவூர் ஹுசைன் ராணா அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். ராணா நாடு கடத்தப்பட்டிருப்பது, மும்பை தாக்குதல்களில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்பதை பாகிஸ்தானுக்கு நினைவூட்டுகிறது.
இந்தியாவில் இருந்து தப்பியோடிய மெஹுல் சோக்ஸியை பெல்ஜியம் அரசு கைது செய்துள்ளது. அவரை நாடு கடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்துவது தொடர்பாக பெல்ஜியம் தரப்புடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவுக்கு வருகை தர இருக்கிறார். அவரது வருகையின்போது, அவர் பிரதமரைச் சந்தித்து இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அனைத்து இருதரப்பு பிரச்சினைகள் குறித்தும் விவாதிப்பார்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரை குறித்து பொதுமக்களுக்கு விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடுவோம். விரைவில் யாத்திரை மீண்டும் தொடங்க வாய்ப்பு உள்ளது.
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தைகளை ஒரு நேர்மறையான வளர்ச்சியாக நாங்கள் பார்க்கிறோம். இதுபோன்ற பிரச்சினைகளில் முன்னேறுவதற்கான ஒரு வழியாக உரையாடல் மற்றும் ராஜதந்திரத்தை நாங்கள் எப்போதும் ஆதரித்து வருகிறோம்.
அமெரிக்க வரி உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்காக நாங்கள் அமெரிக்க தரப்பிடம் பேசி வருகிறோம்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று கொள்கையளவில் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இரு தரப்பிலும் உள்ள தொழில்நுட்பக் குழுக்கள் விமானச் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளை ஆராய்ந்து வருகின்றன. இரு தரப்பு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் சந்தித்து, புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்பு உட்பட தொடர்புடைய நடைமுறைகள் குறித்து விவாதித்து வருகின்றனர்.
வங்கதேசத்துடன் சாதகமான மற்றும் ஆக்கபூர்வமான உறவை இந்தியா எதிர்நோக்குகிறது. ஜனநாயக, அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். வர்த்தகப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, கடந்த வாரம், போக்குவரத்து வசதி குறித்து நாங்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டோம்.
வக்பு மசோதாவின் அனைத்து கூறுகளும் இந்தியாவின் உள் விவகாரம். மேலும் உள்ளடக்கியதாகவும், மேலும் முற்போக்கானதாகவும், பயனாளிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வகையிலும் பல உள்ளடக்கிய கொள்கைகளை இந்த மசோதா முன்மொழிகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
QUAD-இன் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. QUAD உச்சிமாநாட்டிற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
மாணவர்களுக்கான அமெரிக்க விசாவில் பல இந்திய மாணவர்களின் F-1 விசா நிலை குறித்து அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து தகவல்களை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த விஷயத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். எங்கள் தூதரகமும், துணைத் தூதரகமும் மாணவர்களுடன் தொடர்பில் உள்ளன” என்று அவர் கூறினார்.