சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை திடீரென பலத்த காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்தது. தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதலே வெப்பம் வாட்டத் தொடங்கியது. அவ்வப்போது வெப்பநிலை உயர்ந்தும் காணப்பட்டது. கடந்த 12-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட 9 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 9 மணிக்கு மேல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் கனமழையாக மாறியது.

மழை வெளுத்து வாங்கிய நிலையில், வண்டலூர் – கேளம்பாக்கம்
சாலையில் மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்.
மாணவர்கள், பணியாளர்கள் அவதி: குறிப்பாக, சேப்பாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, வேப்பேரி, புரசைவாக்கம், பெரம்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், கோயம்பேடு, வளசரவாக்கம், வடபழனி, அரும்பாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளான மேடவாக்கம், தாம்பரம், ஆவடி, பூந்தமல்லி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும், பணிக்குச் செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் நேரத்தோடு கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். கனமழை காரணமாக மெட்ரோ ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சென்னை, புறநகர் பகுதிகளில் பல்வேறு சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, அண்ணா சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்டவற்றில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மழை வெள்ளத்தில் செல்லும் வாகனங்கள்.
| படங்கள்: எம்.முத்துகணேஷ் |
திடீர் மழை தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையஅதிகாரிகளிடம் கேட்டபோது, “கோடை காலத்தில் வெப்பம் அதிகரிக்கும்போது தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்படுவதால், காற்று சுழற்சி உருவாகி திடீரென மேகமூட்டங்கள் உருவாவது வழக்கமான ஒன்று. அவ்வாறு உருவான மேகக்கூட்டங்களால் மழை பெய்துள்ளது” என்றனர்.
8 இடங்களில் கனமழை: நேற்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மேடவாக்கத்தில் 16 செமீ, வளசரவாக்கம் மற்றும் சாலிகிராமத்தில் 11 செமீ, நெற்குன்றத்தில் 10 செமீ மழை பெய்துள்ளது. மொத்தத்தில் 8 இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்துள்ளது.
சித்திரை மாதம் பிறந்து, கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென கனமழை பெய்ததால் சென்னை, புறநகர் பகுதிகளில் வெப்பம் தணிந்து ரம்மியமான சூழல் நிலவியது.

ஓடிய மழைநீரில் செல்லும் வாகனங்கள். | படம்: எம்.முத்துகணேஷ் |
விமான சேவைகள் பாதிப்பு: மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் சென்னையில் தரையிறங்க முடியாததால் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. ஹைதராபாத், குவாஹாட்டி, பெங்களூருவில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன.
மழை குறைந்து வானிலை சீரான பிறகு, அந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின. பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட விமானமும் பின்னர் சென்னையில் தரையிறங்கியது. டெல்லி, மும்பை, கொச்சி, கோவை, தோகா செல்லும் விமானங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

பேனர், பலத்த காற்று, மழையால் சரிந்து விழுந்தது. | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |
ஏப். 27 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘‘தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று முதல் 20-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.