புதுடெல்லி,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் போரல் 49 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியும் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 5 பந்தில் இரு விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன் எடுத்தது. பின்னர் 12 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 4 பந்தில் 13 ரன் சேர்த்து வெற்றி பெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின்போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான முனாப் படேலுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதித்து ஐ.பி.எல். நிர்வாகம் தண்டனை வழங்கியுள்ளது.
அவர் எந்த காரணத்திற்காக நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறித்து தகவல் வெளிவரவில்லை. இருப்பினும் களத்தில் உள்ள வீரர்களுக்கு தன்னுடைய ஆலோசனைகளை தெரிவிக்கும் வகையில் மற்றொரு வீரரை அனுப்ப நடுவர் மறுத்ததால் முனாப் படேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகிறது.