சென்னை: தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்ற இளங்கோவன், தாக்கல் செய்த மனுவில், “தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்,” என்று கோரியிருந்தார். இந்த மனு சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன், “பகுஜன் சமாஜ் கட்சி தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. அந்தக் கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சின்னத்தை, அசாம் தவிர மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தவெக-வின் கட்சிக் கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது.
ஏற்கெனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியபோது, தவெக இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் பதிவு செய்யும் போது இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. எனவே யானை சின்னத்தைப் பயன்படுத்த தவெகவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு வரும் ஏப்.29-ம் தேதிக்குள், தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.