லண்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அங்கு 3-ம் பாலினத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு தடை விதித்தார். மேலும் அவர்களை நாட்டைவிட்டும் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார்.
இதனால் பெரும்பாலான திருநங்கைகள், ஓரின சேர்க்கையாளர்கள் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புகுந்தனர். இதனால் இங்கிலாந்தில் தற்போது திருநங்கைகள் மக்கள்தொகை எகிறி வருகிறது. இங்கிலாந்தில் திருநங்கைகளுக்கு சட்டபூர்வமாக கடந்த 2010-ம் ஆண்டு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
ஆனால் அவர்களை தனி பாலினம் என வரையறுக்காமல் ஆண் அல்லது பெண் என 2 இனங்களில் ஏதாவது ஒரு இனத்தில் தன்னை இணைத்து கொள்ளலாம். அதற்காக பாலின அங்கீகாரச் சான்றிதழை ஆண் அல்லது பெண் இனத்தில் பதிவு செய்து கொண்டு கட்டாயம் வாங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதனை தொடர்ந்து அங்கு வசித்து வரும் பெரும்பாலான திருநங்கைகள் தங்களை பெண்கள் என அடையாளப்படுத்தி கொண்டு பாலின அங்கீகாரச் சான்றிதழை பெற்று கொண்டு வந்தனர். இதனால் ராணுவம், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்டவற்றில் தங்களுக்கு ஒதுக்கப்படும் இடஒதுக்கீட்டில் திருநங்கைகள் ஆக்கிரமிப்பு செய்வதாக பெண்கள் போராட்டம் நடத்தினர்.
திருநங்கைகள் தங்களுக்கு உண்டான இடஒதுக்கீட்டில் திருநங்கைகள் உரிமை கோர கூடாது எனக்கூறி இங்கிலாந்தில் உள்ள பெண் உரிமை போராளிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக பெண் நீதிபதி உள்பட 4 பேர் கொண்ட சிறப்பு தனி அமர்வு நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது பெண்கள் என்னும் வரையறைக்குள் திருநங்கைகளை கருதுவது சட்டவிரோதம் என்றும் திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது எனவும் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகளை ரத்து செய்து தீர்ப்பு கூறினர். இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளித்து பெண் உரிமை குழுவினர் இங்கிலாந்து நாட்டின் வீதிகளில் இறங்கி கொண்டாடினர்.